மயிலாடுதுறை வைத்தீஸ்வரன் கோவிலில் காவடி, பால்குடம் எடுத்து பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஜன 2024 11:01
மயிலாடுதுறை; வைத்தீஸ்வரன் கோவிலில் திரளான பக்தர்கள் பால்காவடி மற்றும் பால்குடம் எடுத்து வந்து பழனி ஆண்டவருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபாடு நடத்தினார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா வைத்தீஸ்வரன் கோவிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தேவார பாடல் பெற்ற தையல்நாயகி சமேத வைத்தியநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் கிழக்கு கோபுரம் அருகே பழனி ஆண்டவர் சுவாமி தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். ஆண்டுதோறும் தைப்பூசம் அன்று பழனி ஆண்டவருக்கு பக்தர்கள் காவடி எடுத்து வந்து வழிபாடு செய்வது வழக்கம். இவ்வாண்டு தைப்பூசத் திருநாளான இன்று திரளான பக்தர்கள் மேலரத வீதியில் உள்ள ஆட்கொண்ட விநாயகர் கோவிலில் இருந்து மங்கள வாத்தியங்கள் இசைக்க, பல்வேறு சுவாமிகளின் வேடம் தரித்த கலைஞர்களின் நடன நிகழ்ச்சியுடன் பால் காவடி மற்றும் பால் குடங்கள் எடுத்து வீதி உலாவாக வந்து பழனி ஆண்டவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்தனர். தொடர்ந்து தைப்பூச விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ வைத்தீஸ்வரா அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.