பதிவு செய்த நாள்
27
ஜன
2024
10:01
கோவில் இல்லாத ஊரில், குடியிருக்க வேண்டாம் என்று பழமொழி உண்டு. இதனால், ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு உடையவர்கள், கோவில்கள் அதிகம் இருக்கும் ஊர்களில் குடியேறுவர் கர்நாடகாவில் ஒரு ஊரில், ஒரே இடத்தில் 108 கோவில்கள் உள்ளன. அந்த கோவில்கள் பற்றிய விவரம்:
பெங்களூரு ரூரல் தேவனஹள்ளி என்றால், நமக்கு முதலில் நினைவுக்கு வருவது அங்கு உள்ள, கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் தான். ஆனால், அதே தேவனஹள்ளியில் 108 கோவில்கள், ஒரே இடத்தில் அமைந்து உள்ளன. தேவனஹள்ளி பின்னமங்களா பகுதியில், ஸ்ரீநகோடா அவட்டி என்ற ஜெயின் கோவில் உள்ளது. இக்கோவிலில் பார்ஷ்வநாத் பகவான் சிலை உள்ளது. பார்ஷ்வநாத் பகவான் தான், இந்த கோவிலின் முக்கிய தெய்வம் ஆவார். கோவில் அமைந்துள்ள இடம், மன்னர் காலத்தில் புகையிலை, உற்பத்தி செய்யம் இடமாக இருந்தது. சுதந்திரத்திற்கு பின், பட்டு கூடுகள் வளர்க்கும் இடமாக மாறியுள்ளது. அதன்பின்னர் அந்த இடத்தை சிலர் வாங்கினர். இந்நிலையில் கடந்த 1990ல், ராஜஸ்தானின் ராஜேஸ் ஜெயின் என்பவர், 11 ஏக்கரில் நிலம் வாங்கி, ஜெயின் கோவில் கட்டினார். இதற்காக ராஜஸ்தானில் இருந்து, பளிங்கு கற்கள் கொண்டு வரப்பட்டன. ஜெயின் கோவில் வளாகத்தில் 107 சிறிய கோவில்களும் கட்டப்பட்டது. கோவில் வளாகத்தில் நுழையும் போது, அமைதியான சூழல் நிலவுகிறது. சிறிய மணிகள் ஒலிப்பது, தெய்வீக உணர்வை துாண்டுகிறது. 108 தீர்த்தங்கரர்கள் சிலையும் உள்ளன. ஆனால் இந்த கோவிலை பற்றி, அதிகம் யாருக்கும் தெரிவது இல்லை. காலை 6:00 மணி முதல் மாலை 7:30 மணி வரை, இந்த கோவில் நடை திறந்திருக்கும். நுழைவு கட்டணம் எதுவும் இல்லை. நவம்பர் முதல் மார்ச் வரையிலான மாதங்கள், இங்கு செல்ல ஏற்ற நேரமாக உள்ளது. பெங்களூரு மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து, தேவனஹள்ளி, பின்னமங்களா பகுதிகளுக்கு அடிக்கடி பஸ்கள் இயக்கப்படுகின்றன.