பதிவு செய்த நாள்
01
பிப்
2024
10:02
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
காஞ்சிபுரம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள, சுந்தராம்பிகை உடனுறை கச்சபேஸ்வரர் கோவில், இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்து அமுதம் எடுத்த போது மத்தாக பயன்பட்ட மந்திரமலை கடலில் அழுந்த துவங்கியது. கலங்கிய தேவர்கள் மகாவிஷ்ணுவிடம் வேண்ட அவர் கச்சப (ஆமை) வடிவமெடுத்து மந்திரமலையை தாங்க எண்ணம் கொண்டார். அதற்காக அவர் ஆமை வடிவில் இத்தலத்திற்கு வந்து தீர்த்தம் உண்டாக்கி அதில் நீராடி, சிவனை வேண்டி மலையை தாங்கும் ஆற்றல் பெற்றார். எனவே இத்தலத்து சிவனுக்கு, கச்சபேஸ்வரர் என்ற பெயரும், தலத்திற்கு திருக்கச்சூர் என்ற பெயரும் ஏற்பட்டது. சுவாமி சுயம்புவாக மேற்கு பார்த்தபடி இருக்கிறார். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 259 வது தேவாரத்தலம் ஆகும். இத்தகைய சிறப்பு மிக்க இத்தலத்தில் கும்பாபிஷேகம், இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு 33 யாகசாலைகள் அமைக்கப்பட்டு, 160 சிவாச்சாரியார்கள் ஆறு கால பூஜைகள் மற்றும் விசேஷ ஹோமங்கள் நடத்தி வந்தனர். இன்று காலை கலச புறப்பாடு நடைபெற்று, விமானம், ராஜகோபுரம், ரிஷி கோபுரம், பரிவார மூர்த்திகள் மற்றும் மூலவர் போன்றவைகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கோவில் விழா காரணமாக, கோவிலை சுற்றி போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால், கோவிலை சுற்றியுள்ள எஸ்.எஸ்.கே.வி., பள்ளி, சுப்பராய முதலியார் மேல்நிலைப் பள்ளி, பெரிய காஞ்சிபுரம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளி, அந்திரசன் மேல்நிலைப் பள்ளி, ஸ்ரீநாராயணகுரு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிக்கு இன்று ஒரு நாள் விடுப்பு அளிக்கப்பட்டு உள்ளது.