பனி சூழ்ந்து கைலாயம் போல் காட்சியளிக்கும் ருத்ரபிரயாக் கார்த்திக் சுவாமி கோயில்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01பிப் 2024 02:02
உத்தரகண்ட்; உத்தரகண்ட் மாநிலம், ருத்ரபிரயாக், கனாக்சூரி கிராமம், கேதார்நாத் அருகே உள்ள கார்த்திக் சுவாமி கோவில் முழுவதும் பனியால் சூழப்பட்டு பரமனின் கைலாயம் போல் காட்சியளிக்கிறது.
உத்தரகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் பழமையான கார்த்திக் சுவாமி எனும் முருகன் கோயில் அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3,050 மீட்டர் உயரத்தில் இக்கோயில் அமையப் பெற்றுள்ளது தனிச்சிறப்பு. உத்தரகண்டில் உள்ள கார்த்திகேயனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரே கோயில் இது. இந்தியாவின் வடக்குப் பகுதியில் உள்ள முருகன் தலங்களில் மிகவும் முக்கியத்துவம் பெற்றதாக இக்கோயில் உள்ளது.
நாரதர் கொடுத்த ஞானப்பழத்தை, உலகை முதலில் சுற்றி வருபவர் யாரோ, அவருக்கே இந்தப் பழம் என் ஈசன் தனது மகன்களான கணபதி, முருகனிடம் கூறினார். உலகைச் சுற்ற வேண்டும் என்றாலும், ஈசன் படைத்த ஏழு உலகங்களையும் வலம் வர மயிலேறி புறப்பட்டார், முருகன். கணபதியோ, எல்லா உலகங்களையும் தனக்குள்ளே அடக்கி அருள்பாலித்துக் கொண்டிருக்கும் சிவசக்தியை சுற்றி அம்மையப்பனை வலம் வந்து , கந்தன் வரும்முன்பே கனியை பெற்றுக் கொண்டார் கணபதி. திரும்பி வந்த கந்தன் அண்ணன் கையில் கனியைக் கண்டார். கோபம் கொண்டு கைலாசத்தை விட்டு வெளியேறி க்ரோஞ்ச் பர்வத்திற்கு வந்ததாக புராணங்கள் கூறுகின்றன. சிறப்பு மிக்க இக்கோயிலில் முருகப்பெருமான், கார்த்திகேயன் கார்த்திக் சுவாமி என்று வழிபடப்பட்டு வருகிறார். தற்போது ஏற்பட்டுள்ள கடும் பனியில் கோவில் முழுவதும் எங்கும் வெள்ளை நிறமாக சிவனின் கைலாயம் போல் காட்சியளிக்கிறது.