பதிவு செய்த நாள்
01
பிப்
2024
03:02
வாரணாசி, வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோவிலை ஒட்டியுள்ள ஞானவாபி வளாகத்தின் பாதாள அறையில் ஹிந்து பூஜாரியின் குடும்பத்தார் வழிபாடு செய்வதற்கு, மாவட்ட நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் பூஜை தொடங்கி ஆரத்தி நிகழ்ச்சியும் நடந்தது.
உத்தர பிரதேசத்தின் வாரணாசியில், காசி விஸ்வநாதர் கோவிலை ஒட்டி ஞானவாபி வளாகம் அமைந்துள்ளது. ஹிந்து கோவில் இடிக்கப்பட்டு, அதன் மீது இந்த வளாகம் கட்டப்பட்டதால், அதை ஹிந்துக்களிடம் ஒப்படைக்கக் கோரி வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக, தொல்லியல் துறை ஆய்வுக்கு உத்தரவிடப்பட்டு, ஆய்வறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில், கோவில் மீது மசூதி கட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், ஞானவாபி வளாகத்தின் தரை தளத்துக்கு அடியே நான்கு பாதாள அறைகள் உள்ளன. இவற்றில், ஒரு அறையில் காசி விஸ்வநாதர் கோவிலில் பூஜாரியாக இருந்த சோம்நாத் வியாஸ், 1993 வரை பூஜைகள் செய்து வந்தார். கடந்த 1992ல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின், இந்த அறையை மூட, அப்போது ஆட்சியில் இருந்த சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த முதல்வர் முலாயம் சிங் உத்தரவிட்டார். இந்நிலையில், சோம்நாத் வியாசின் பேரனான சைலேந்திர குமார் பதக், அந்த அறையில் தொடர்ந்து பூஜைகள் செய்வதற்கு அனுமதி கேட்டு, வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதை விசாரித்த நீதிமன்றம், அந்த இடத்தில், பூஜாரி சோம்நாத் வியாசின் குடும்பத்தினர் பூஜைகள் செய்வதற்கு அனுமதி அளித்து நேற்று உத்தரவிட்டது. இதன்படி ஞானவாபியில் நேற்று நள்ளிரவு பூஜை தொடங்கி ஆரத்தி நிகழ்ச்சியும் நடந்தது. ஞானவாபி வளாக கணக்கெடுப்பின் போது கண்டெடுக்கப்பட்ட சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. இதையொட்டி அங்கு துணை ராணுவ படையினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.