பதிவு செய்த நாள்
02
பிப்
2024
12:02
சென்னை: ஒரு கால பூஜை திட்டத்தில், 17,000 கோவில்கள் பயன் பெறுகின்றன. இத்திட்டத்திற்காக, 200 கோடி ரூபாயை மானியமாக அரசு வழங்கி உள்ளது.
தமிழக அரசின் செய்தி குறிப்பு: தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற, 2021 மே முதல் இதுவரை, 1,339 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட கோவில்களை புனரமைப்பு செய்வதற்காக, இரண்டு ஆண்டுகளில், 200 கோடி ரூபாய் அரசு மானியமாக வழங்கப்பட்டுள்ளது. இந்த, 200 கோடி ரூபாயுடன், நன்கொடையாளர்கள் வழங்கிய 104.84 கோடி ரூபாயையும் சேர்த்து, மொத்தம் 304.84 கோடி ரூபாய் மதிப்பில் தற்போது 197 கோவில்களில் திருப்பணிகள் நடந்து வருகின்றன. கிராமப்புற கோவில்களுக்கும், ஆதிதிராவிடர், பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் உள்ள கோவில்களுக்கும் வழங்கப்பட்ட நிதி 1 லட்சம் ரூபாய், தற்போது 2 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் உதவி பெறும் கோவில்கள் எண்ணிக்கை, ஆண்டுக்கு 1,000 என்பது 1,250 ஆக உயர்த்தப்பட்டு, இரண்டு ஆண்டுகளில் 2,500 கோவில்களுக்கு, 100 கோடி ரூபாய் கூடுதலாக மானியம் அளிக்கப்பட்டுள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், ஒரு கால பூஜை கூட செய்ய நிதி வசதி இல்லாத 12,959 கோவில்களுக்கு வழங்கப்பட்ட வைப்பு நிதி, தலா 1 லட்சம் ரூபாய் என்பது, 2 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டு, 130 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளில் புதிதாக 2,000 கோவில்கள், ஒரு கால பூஜை திட்டத்தில் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. தற்போது, 17,000 கோவில்கள் பயன் பெறுகின்றன. இத்திட்டத்திற்காக மட்டும், 200 கோடி ரூபாய் மானியமாக அரசு வழங்கி உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.