பதிவு செய்த நாள்
03
பிப்
2024
12:02
கம்பம்; சபரிமலை ஐயப்பன் கோயிலில் தற்போது முடிந்த மகர விளக்கு மண்டல பூஜை சீசனில் 52 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்து சென்றுள்ளதாக தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.
பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் மாதந்தோறும் தமிழ் மாதம் முதல் 5 நாட்கள் நடை திறந்து பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். இது தவிர ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் முதல் தேதி நடை திறக்கப்பட்டு தொடர்ந்து 2 மாதங்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறது. இதுவே மகர விளக்கு மண்டல பூஜை காலமாகும். இந்த 2 மாத சீசனில் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்கு செல்கின்றனர். இந்தாண்டு தற்போது முடிந்த மகர விளக்கு மண்டல பூஜை சீசனில் எந்தாண்டும் இல்லாத வகையில் பக்தர்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. பக்தர்களுக்கு சரியான வசதிகள் செய்து தரப்படவில்லை என்றும், பலர் தரிசனம் செய்ய முடியாமல் திரும்பி விட்டனர் என்றும், பலர் போலீசாரால் தாக்கப்பட்டனர் என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதை மறுத்து தேவசம் போர்டு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், " இந்த சீசனில் 52 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்து சென்றுள்ளனர். பக்தர்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. தேவையான வசதிகள் செய்யப்பட்டிருந்தது. சோசியல் மீடியாவில் திட்டமிட்டு பொய்ப் பிரசாரம் செய்யப்பட்டது. 2023 - 24 நிதியாண்டில் ரூ 30 கோடி செலவில் எருமேலி , நிலக்கல், செங்கனூர், மணியங்கோடு, கால கூட்டம், சிரங்கரா பகுதிகளில் சபரிமலை வரும் பக்தர்களுக்கென அடிப்படை வசதிகள் செய்யப்பட உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.