பதிவு செய்த நாள்
05
பிப்
2024
01:02
அவிநாசி; அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் பக்தர்களை தொடர்ந்து அவமதிக்கும் அறநிலையத்துறை அதிகாரிகள். கை கொடுத்த தன்னார்வலர் குழுவினர்.
அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் திருக்கோவிலில் கும்பாபிஷேக விழா கடந்த ஜனவரி 24ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது இதில் முக்கிய நிகழ்சியான கும்பாபிஷேகம் பிப்ரவரி 2ம் தேதி லட்சக்கணக்கான பக்தர்கள் திரள விமர்சையாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நேற்று முன் தினம் முதல் மண்டல பூஜை 48 நாட்களுக்கு நடைபெற உள்ளது. இதில், கும்பாபிஷேக நாளில் சாமியை தரிசனம் செய்ய முடியாத பக்தர்கள், அன்றைய தினம் வர முடியாத பக்தர்கள் என ஒரு சேர திரள ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் ஒரே நாளில் குவிந்தனர். இதனால் கடும் நெரிசல் ஏற்பட்டது. கோவில் வளாகத்தில் கடும் வெயிலில் பக்தர்கள் பல மணி நேரம் நின்று தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் அறநிலையத்துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்யவில்லை. இத்தகவல் அறிந்த தன்னார்வலர்கள் முயற்சியில் பக்தர்களுக்கு குடிநீர் மற்றும் தரை விரிப்புகள் உள்ளிட்டவைகளை ஏற்பாடு செய்தனர். இதே நிலை நேற்றும் நீடித்தது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். பக்தர்கள் வரிசை கோவில் வளாகத்தில் இருந்து வெளியேறி மங்கலம் சாலை வரை நீண்டு கொண்டே சென்றது. இதனால் கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம் காத்திருந்து , பக்தர்கள் சாமியை தரிசனம் செய்ய வேண்டியதானது. முதியவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகளுடன் வந்திருந்தவர்கள் என பலரும் வெயிலால் வாடி வதங்கினர். கோவில் வளாகத்தில் நிழலுக்கு ஒதுங்குவதற்கு என எதுவும் இல்லாததால்,கடும் வெயிலில் பல மணி நேரம் நிற்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர். பலரும் சாமியை தரிசனம் செய்ய முடியாமல் தீபஸ்தம்பத்தில் அகல் விளக்கை ஏற்றி அங்கிருந்தே சாமியை கும்பிட்டு விட்டு திரும்பிச் சென்றனர். மேலும் நேரம் அதிகரிக்க, பக்தர்கள் வருகை கட்டுக்கடங்காமல் சென்றது. பலரும் சுடும் வெயிலிலும், தண்ணீர் தாகத்திலும் தவித்தனர். தகவல் அறிந்த தன்னார்வலர்கள் ரவிக்குமார், கர்ணன்,செந்தில் குமார், சிராஜ் உள்ளிட்டோர் கோவிலுக்கு விரைந்து, பைப் மூலம் தண்ணீரை பீச்சியடித்து வெயிலின் தாக்கத்தை குறைத்து பக்தர்கள் வரிசையில் நின்று செல்லவும் ஒழுங்குப்படுத்தினர். மண்டல பூஜை கட்டணமாக ரூ 20,000 என ஒரு கட்டளைதாரர்களிடமிருந்து வசூல் செய்யும் அறநிலையத்துறை கும்பாபிஷேகம் முடிந்து இரண்டு நாட்கள் ஆகியும் பக்தர்களுக்கு எந்த அடிப்படை வசதிகளும் கோவிலில் செய்து கொடுக்காமல் தொடர்ந்து அவமதித்து வருவதாக பக்தர் ஒருவர் வேதனையுடன் தெரிவித்தார். இதுகுறித்து புகார் தெரிவிக்க அலுவலகம் சென்றால் செயல் அலுவலர் வெளியில் சென்றுள்ளார். எனவே சிறிது நேரம் கழித்து வாருங்கள் என்று அங்கு இருக்கும் பெண் ஊழியர்கள் கூறுகின்றனர் என்றார். பக்தர்களின் புகார் குறித்து கோவில் செயல் அலுவலர் பெரிய மருதுபாண்டியை மொபைலில் தொடர்பு கொண்டபோது அழைப்பை எடுக்கவில்லை.