பதிவு செய்த நாள்
05
பிப்
2024
06:02
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் பட்டீஸ்வரத்தில், மங்களநாயகி சமேத ராமலிங்க சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கோவிலாகும். இக்கோவில் ராஜராஜ சோழனின் 5வது மனைவியான பஞ்சவன்மாதேவி என்பவரின் பள்ளி படைகோவிலாகும்.
பஞ்சவன்மாதேவி தனது கணவரான ராஜராஜசோழனின் மகன் ராஜேந்திர சோழன் மீது மிகுந்த பாசம் கொண்டு தனது சொந்த மகனாக வளர்த்து வந்தார். பஞ்சவன்மாதேவி எங்கு தனக்குக் குழந்தைகள் பிறந்தால் ஆட்சி பீடத்திற்குப் போட்டிக்கு வந்து விடுவார்களோ என, தனக்கு குழந்தை பிறக்கக் கூடாது என்று மூலிகை மருந்து குடித்து தன்னை மலடாக்கிக் கொண்டார். இந்த தியாகத்தை செய்த பஞ்சவன்மாதேவியான தனது சிற்றன்னையினை நினைவாக, தான் மங்களநாயகி சமேத ராமலிங்க சுவாமி கோவிலை ராஜேந்திர சோழன் அமைத்தார். இக்கோவிலில் பட்டீஸ்வரம் அண்ணா அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த தொன்மை பாதுகாப்பு மன்றம், சாரணர் இயக்கம், தேசிய பசுமைப்படை இயக்கத்தைச் சேர்ந்த 54 மாணவர்கள், தலைமையாசிரியை ஹேமலதா, ஆசிரியர்கள் முத்துக்குமாரசாமி, வினோத் குமார், சிவராம கிருஷ்ணன் ஆகியோர், தொன்மையான இந்தக் கோவிலை பற்றி தெரிந்து கொள்ளச் சென்றனர். தொடர்ந்து, அந்தக் கோவிலைத் துாய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, கோவிலின் வலது புறத்தில் சுமார் ஐந்து மீட்டர் சுற்றளவு கொண்ட பழங்காலத்து கற்களைக் கொண்டு கட்டப்பட்ட கிணற்றின் மேற்புற சுற்று சுவர் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், ஒரு அடி ஆழத்திற்கு தோண்டிப் பார்த்தபோது, கிணறு இருப்பதற்கான தடம் தெரியவந்தது. இதையடுத்து பட்டீஸ்வர் கோவில் நிர்வாகம் ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளனர். பழங்காலத்து கிணற்றின் மேற்புற சுற்றுச் சுவரை அப்பகுதியினர் பலரும் ஆர்வத்துடன் பார்த்து சென்றனர்.