கொடைக்கானல் குழந்தை வேலப்பர் கோயில் தேரோட்டம்; பக்தர்கள் வடம் பிடித்தனர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06பிப் 2024 10:02
கொடைக்கானல், கொடைக்கானல் பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயில் தைப்பூச விழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. பழநி முருகன் கோயிலின் உபகோயிலான பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயிலில் ஜன.28 ல் கொடியேற்றத்தை தொடர்ந்து சேவல், அன்னம், மயில், காளை, ஆட்டுக் கிடா, பூதம், சிங்கம், யானை உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி நகர்வலம் வருதல் நடந்தது. ஆயிரக்கணக்கானோர் தேரின் முன் தேங்காய் உடைத்து வழிபாடு செய்தனர். பக்தர்கள் அரோகரா, அரோகரா கோஷம் முழங்க தேரை இழுத்தனர். மலைப்பகுதியிலேயே இது போன்ற தேரோட்டம் பூம்பாறை குழந்தைவேலப்பர் கோயிலில் மட்டுமே நடக்கிறது. ராஜா அலங்காரத்தில் காட்சியளித்த சுவாமியை பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்கள் பால், பன்னீர் காவடி எடுத்தும், பறவை காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தேரோட்ட நிகழ்வை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். விழாவில் ஏராளமான வெளியூர் பக்தர்கள் வருகை தந்த நிலையில் போக்குவரத்து நெரிசலால் பல மணி நேரம் அவதிப்பட்டனர். இதற்கான முன்னேற்பாடுகளை போலீசார் முறையாக செய்யாததால் பயணிகள் இரண்டு மணி நேரம் தாமதத்திற்கு பின்னரே பூம்பாறை வந்தடைய முடிந்தது. வழக்கம் போல் மேல்மலை பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் 3 மணி நேர தாமதத்திற்கு பின்னரே கிராமப் பகுதிகளை வந்தடைந்ததால் மலைப்பகுதி பயணிகள் அவதி அடைந்தனர்.