கீழப்பெரும்பள்ளம் கேது ஸ்தலத்தில் புதுச்சேரி முதல்வர் சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06பிப் 2024 05:02
மயிலாடுதுறை; கீழப்பெரும்பள்ளம் கேது பகவான் கோவிலில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி சிறப்பு வழிபாடு நடத்தினார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் சவுந்தர நாயகி சமேத நாகநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. தேவார பாடல் பெற்ற இக்கோவிலில் நவகிரகங்களில் சாயா கிரகம் என அழைக்கப்படும் கேது பகவான் தனி சன்னதியில் அருள் பாலித்து வருகிறார். செவ்வாய் மற்றும் ஞாயிறு கிழமைகளில் எமகண்ட நேரத்தில் கேதுவை வழிபட்டால் தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்பு மிக்க கோவிலுக்கு இன்று வந்த புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரங்கசாமியை கோவில் நிர்வாக அதிகாரி அன்பரசன் மற்றும் சிவாச்சாரியார்கள் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர். தொடர்ந்து புதுச்சேரி முதல்வர் விநாயகர், நாகநாத சுவாமி, சவுந்தரநாயகி மற்றும் கேது பகவான் சன்னதிகளில் அர்ச்சனை செய்து சிறப்பு வழிபாடு நடத்தினார். அவருக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. புதுச்சேரி முதல்வர் வருகையை ஒட்டி கோவில் வளாகத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.