பதிவு செய்த நாள்
06
பிப்
2024
05:02
ஆண்டிபட்டி; தெப்பம்பட்டி அருகே மாவூற்று வேலப்பர் கோயிலில் பிப்ரவரி 9 ல் நடைபெற உள்ள தை அமாவாசை விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு தேவையான முன்னேற்பாடுகள் கோயில் நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளது மாவூற்று வேலப்பர் கோயில். மருத மரங்களின் வேர்ப்பகுதியில் இருந்து வரும் வற்றாத சுனை கோயிலின் தனிச்சிறப்பு. ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் சித்திரை முதல் தேதி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவர். மாதாந்திர கார்த்திகை, பவுர்ணமி, அமாவாசை நாட்களில் வெளியூர்களில் இருந்து பக்தர்கள் பலர் வந்து செல்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் கோயில் நிர்வாகம் சார்பில் நடத்தப்படும் தை அமாவாசை விழாவிலும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கூடுவர்.
இது குறித்து கோயில் செயல் அலுவலர் நதியா கூறியதாவது: வெளியூரிலிருந்து வரும் பக்தர்களுக்கு ஆண்டிபட்டியில் இருந்து சிறப்பு டவுன் பஸ் வசதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோயில் வளாகத்தில் பக்தர்களுக்கு தேவையான கழிப்பறை, குடிநீர் வசதி ஏற்கனவே உள்ளது. கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்கும், போலீஸ் பாதுகாப்புக்கும், முதல் உதவிக்கான மருத்துவ குழுவிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோயில் வளாகத்தில் வனத்துறை தீயணைப்புத்துறை கண்காணிப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு சுனையில் வரும் அதிகப்படியான நீர் வரத்து பக்தர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்துவதாக உள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.