பதிவு செய்த நாள்
06
பிப்
2024
05:02
உசிலம்பட்டி; 58 கிராம கால்வாய் திட்டத்தின் கடைமடை பகுதி கண்மாயான சடச்சிபட்டி கண்மாய்க்கு வருவாய், பொதுப்பணித்துறை அதிகாரிகள் இணைந்து இந்த முறை நீர் வழிப்பாதை அமைத்து தண்ணீர் திறந்து விட்டுள்ளனர். தங்கள் கண்மாய்க்கு 58 கிராம கால்வாய் மூலம் தண்ணீர் வந்து சேர்ந்துள்ளதற்கு மகிழ்ச்சி தெரிவித்து கிராம மக்கள் கண்மாய் காவல் தெய்வங்களான பைரவர், சடச்சியம்மன் கோயிலில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். ஊராட்சி தலைவர் ராஜதுரை, நீர் வளத்துறை அதிகாரிகள் மனோகரன், பாண்டியன், 58 கிராம கால்வாய் பாசன விவசாயிகள் சங்க நிர்வாகிகள் சின்னயோசனை, பெருமாள், உதயகுமார், தமிழ்செல்வன், ஜான்சன், தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் நேதாஜி, காராமணி, நஞ்சை, புஞ்சை விவசாயிகள் சங்க தலைவர் மணிகண்டன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 35 ஆண்டுகளுக்கு பிறகு தங்கள் கண்மாய்க்கு தண்ணீர் வந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. தொடர்ந்து கூடுதல் தண்ணீர் வழங்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.