திருப்புல்லாணி; திருப்புல்லாணி அருகே சேதுக்கரையில் தை அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். சேதுக்கரை மன்னார் வளைகுடா கடற்கரையோரத்தில் இன்று அதிகாலை 4:00 மணி முதல் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடற்கரைக்கு குவிந்த வண்ணம் இருந்தனர். முன்னோர்களுக்கு திதி, தெர்ப்பணம், பித்ரு கடன் உள்ளிட்ட சங்கல்ப பூஜைகளை புரோகிதர்கள் மூலம் நிறைவேற்றினர். முன்னோர்களுக்கான பித்ரு கடன் பூஜைகளை நிறைவேற்றிய பிறகு சேதுக்கரை கடலில் புனித நீராடினர். சேது பந்தன ஜெயவீர ஆஞ்சநேயர் கோயிலில் நீண்ட வரிசையில் தேங்காய் உடைத்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் நெய் தீபமேற்றி வழிபாடு செய்தனர். சேதுக்கரை அருகே சின்னக்கோயிலில் உள்ள வெள்ளைப் பிள்ளையார், தமிழ் மாமுனிவர் அகத்தியருக்கு பூஜை செய்து வழிபாடு செய்தனர். மூலவர்கள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் புனித நீராடுவதற்காக குவிந்தனர். சேதுக்கரை ஊராட்சி சார்பில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டன.
திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்தனர். பசுக்களுக்கு பச்சரிசி, வெல்லம், அகத்திக்கீரை உள்ளிட்டவைகளை உணவாக கொடுத்தனர். காகங்களுக்கு அன்னமிட்டனர். தை அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் போக்குவரத்து கழகத்தின் சார்பில் இயக்கப்பட்டன. திருப்புல்லாணி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.