பதிவு செய்த நாள்
09
பிப்
2024
05:02
ஆண்டிபட்டி; தை அமாவாசையை முன்னிட்டு ஆண்டிபட்டி அருகே மாவூற்று வேலப்பர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள இக்கோயிலில் தை, ஆடி, புரட்டாசி அமாவாசை நாட்களில் ஏராளமான பக்தர்கள் கூடுவர். நேற்று நடந்த நிகழ்ச்சியில் வேலப்பர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் பூஜைகள் செய்து வழிபட்டனர். காவல் தெய்வம் கருப்பசாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. மருத மரங்களின் வேர்ப் பகுதியில் இருந்து வரும் வற்றாத சுனையில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வேலப்பர் சுவாமியை வழிபட்டு சென்றனர். ஆண்டிபட்டி மேற்கு ஓடைத்தெரு வீர ஆஞ்சநேயர் கோயிலில் தை அமாவாசையை முன்னிட்டு ஆஞ்சநேயர் சுவாமிக்கு விபூதி, மஞ்சள், குங்குமம், பால், தயிர், தேன், இளநீர், சந்தனம் உட்பட 21 வகையான அபிஷேகம் பூஜைகள் செய்து வழிபட்டனர். பல்வேறு கிராமங்களில் இருந்து பக்தர்கள் வந்து சென்றனர். பக்தர்களுக்கு துளசி, செந்தூரம், லட்டு, வடை ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டன. அன்னதானம் நடந்தது.