பதிவு செய்த நாள்
26
அக்
2012
11:10
தஞ்சாவூர்: பெரியகோவிலில் சோழமன்னன் சதயவிழாவையொட்டி, பிரகதீஸ்வரருக்கு பேரபிஷேகம், சிறப்பு பூஜைகள், நேற்றுக்காலை முதல், மதியம் வரை, ஐந்து மணி நேரம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். தஞ்சையில் சோழமன்னன் ராஜராஜன், 1,027வது சதய விழா பெரியகோவிலில், இரண்டு நாட்கள் நடந்தது. பெரியகோவில் மதிற்சுவர்கள், கோவில் நுழைவாயில், உள்புறம் மண்டபங்கள் என, அனைத்து பகுதியும் மின் அலங்காரத்தில் ஒளிர்ந்தது. இதனால், இரவு நேரத்திலும் கம்பீரமாக காட்சியளித்த பெரியகோவில் அழகை வெளியூர் பயணிகள், பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.பெரியகோவிலில் நேற்றும், இரண்டாம் நாளாக சதய விழா நிகழ்ச்சிகள் நடந்தது. முதல் நிகழ்ச்சியாக காலை, 8 மணிக்கு பெரியகோவில் வெளியேயுள்ள பிருந்தாவனத்தில் அமைக்கப்பட்டுள்ள சோழன் சிலைக்கு, கலெக்டர் பாஸ்கரன் மாலையணிவித்தார். இதில், சதய விழாக்குழுவினர் பங்கேற்று மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, பல்வேறு அமைப்பு நிர்வாகிகள், பொதுமக்கள் என, பலரும் சோழன் சிலைக்கு மாலையணிவித்தனர்.பின்னர் திருமுறை திருவீதி உலாவில், தேவார திருமுறைகளை வைத்து, முக்கிய வீதிகள் வழியாக கோவில் யானை "வெள்ளையம்மாள் பங்கேற்க, ஊர்வலமாக எடுத்து வந்து, மீண்டும் கோவிலை அடைந்தனர்.
பெரியகோவிலில் காலை, 8 மணிக்கு துவங்கி, மதியம், ஒரு மணி வரை பிரகதீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.இதில், சிறப்பம்சமாக திருவேற்காடு ஐயப்ப ஸ்வாமிகள் பங்கேற்று, பேரபிஷேகத்தை நடத்தி வைத்தார். அப்போது, கோவில் பிரதான மண்டபம் முழுவதும் பக்தர்கள் நிரம்பி, அமர்ந்தபடி அபிஷேக காட்சிகளையும், சிறப்பு பூஜைகளையும் கண்டு, பிரகதீஸ்வரரை வழிபட்டனர். சதயவிழாவையொட்டி தஞ்சை நகரத்தில் போக்குவரத்து மாற்றம் செய்து, போலீஸார் முன்கூட்டியே அறிவித்து இருந்தனர். இதன்படி, நகருக்குள் வராமல் வாகனங்கள் வேறு பாதையில் திருப்பி விடப்பட்டன. ஆனாலும் கீழவாசல் உள்பட ஒரு சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன நெரிசலில் சிக்கி பொதுமக்கள் அவதிப்பட்டனர்.தஞ்சை நகரம் முழுவதும் புதிய, பழைய பஸ்ஸ்டாண்ட், முக்கிய சந்திப்புகள் உள்பட அனைத்து இடங்களில், ஐந்து டி.எஸ்.பி.,க்கள், 10 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் ஆயுத படையினர், ஊர்க்காவல்படையினர், உள்ளூர் போலீஸார் என, 500க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்."பேரபிஷேகம் பூஜை பட்டியல்: தஞ்சை ஆண்ட சோழமன்னன் ராஜராஜன் பிறந்த தினத்தையொட்டி, பெரியகோவிலில் நேற்றுக்காலை எட்டு மணிக்கு துவங்கிய பேரபிஷேகம், ஒரு மணி வரை தொடர்ந்து, ஐந்து மணி நேரம் நடந்தது.இதில் வில்வம் இலை, வன்னி இலை உள்பட, 11 வகை இலைகள், விபூதி, தைலக்காப்பு, சாம்பிராணி, நவகவ்யம், திரவியப்பொடி, வாசனைப்பொடி, நெல்லி முள்ளிப்பொடி, மஞ்சள் பொடி, அரிசிமாப்பொடி, பஞ்சாமிர்தம், தேன், நெய், பால், பசுந்தயிர், மாதுளை முத்து, ஆரஞ்சு சுளை, அன்னாசி, திராட்சையிலும் அபிஷேகம் நடத்தப்பட்டது.இடைவெளியின்றி தொடர்ந்து, விளாம்பழம், கொளிஞ்சிப்பழம், நார்த்தம்பழச்சாறு, சாத்துக்குடி சாறு, எலுமிச்சை பழச்சாறு, கருப்பஞ்சாறு, இளநீர், அன்னாபிஷேகம், சந்தனம், பன்னீர், ஏகதாரை, சகஸ்தரதாரை, சிங்கேதனம், வலம்புரி சங்கு, சொர்ணாபிஷேகம், கங்கா ஜலம், 108 ஸ்தபன கலச புனிதநீர் ஆகிய, 47 வகை திரவியங்கள் அடங்கிய பூஜைகள் பட்டியல்படி நடந்தது.