பதிவு செய்த நாள்
13
பிப்
2024
10:02
நத்தம், தென்தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றானது நத்தம் மாரியம்மன் கோவில்.இந்த கோவிலில் மாசி பெருந்திருவிழா நேற்று காலை மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் சிறப்பு பூஜைகள் நடத்தி கோவில் முன் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.இதில் கொடிமரம், நாணல்புல், மாவிலை, வண்ண பூமாலைகள் இணைத்து மாரியம்மன் உருவம்பொரித்த கொடி மரத்திற்கு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தது. தொடர்ந்து மூலவர் மாரியம்மன் வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த விழாவின் போது கோவில் செயல்அலுவலர் சூரியன், உலுப்பகுடி கூட்டுறவு பால்பண்ணை தலைவர் சக்திவேல், திருக்கோவில் பூசாரிகள் கணேஷ், கோபாலகிருஷ்ணன், சின்னராஜ், கிருஷ்ணமூர்த்தி, சுரேஷ்,யுவராஜ், தினேஷ்குமார் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து நாளை செவ்வாய்கிழமை அதிகாலையில் நத்தம் அருகே உள்ள கரந்தமலையில் கன்னிமார் தீர்த்தத்தில் புனித நீராடி தீர்த்தம் எடுத்து வந்து சந்தன கருப்புசுவாமி கோவிலில் பக்தர்கள் ஒன்று கூடுவர். தொடர்ந்து அங்கிருந்து பக்தர்கள் தலையில் தீர்த்த குடங்களை சுமந்தபடி ஊர்வலமாக மாரியம்மன் கோவிலுக்கு அழைத்து செல்லப்படுவர்.பின்னர் அங்கு மஞ்சள் காப்பு கட்டி பக்தர்கள் 15 நாட்கள் விரதம் தொடங்குவார்கள்.தொடர்ந்து திருவிழா நிகழ்ச்சிகள் நடைபெறும்.திருவிழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழி திருவிழா வரும் வருகிற 27-ம் தேதி செவ்வாய்கிழமை நடைபெறுகிறது.திருவிழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும், திருக்கோவில் பூசாரிகளும் செய்து வருகின்றனர்.