பதிவு செய்த நாள்
13
பிப்
2024
01:02
நாளை வசந்த பஞ்சமி. இது பசந்த் பஞ்சமி, ஸ்ரீ பஞ்சமி என்றும் வழங்கப்படுகிறது. ஒருவர் பெற வேண்டிய மிக உயரிய செல்வம் ஞானம். அதை அருளும் சரஸ்வதி தேவி அவதார நாளாக வசந்த பஞ்சமி கொண்டாடப்படுகின்றது. மாசி மாதம் சுக்ல பட்சபஞ்சமி நாள் தான் வசந்த பஞ்சமி நாளாகக் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் நவராத்திாியின் போது தான் மகாநவமி நாளன்று நாம் சரஸ்வதி பூஜையைக் கொண்டாடுகிறோம். ஆனால் வடமாநிலங்களில் வசந்த பஞ்சமி நாளன்றுதான் சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. சரஸ்வதி தேவியின் அவதார நாளாக இது கருதப்படுவதால் பிரம்மா, சரஸ்வதி தேவியின் கையில் வீணையைக் கொடுத்து அதன்மூலம் உலக மக்களுக்குப் பேசும் சக்தியை அளித்ததாகப் புராணம் தொிவிக்கிறது.
முதன்முதலாக ஞான ஒளிப் பிழம்பான அம்பிகை, கானம் இசைக்கத் தொடங்கியவுடன், பிரம்ம தேவரின் படைப்புகள், ஒசை நயம் பெற்றன.. ஆறுகள் சலசலக்கும் ஒலியுடன் ஓடத் துவங்கின. கடல் பெருமுழக்கத்தோடு அலைகளைப் பிரசவித்தது.. காற்று பெருத்த ஓசையுடனும், முணுமுணுக்கும் ஒலியுடனும் வீசியது. மனிதர்கள் மொழியறிவு பெற்றனர். பிரம்மதேவர் மகிழ்ந்தார். மேற்குவங்க மாநிலத்தில் இந்த வசந்த பஞ்சமி நாளில்தான் வித்யாரம்பம் என்கிறாா்கள். இந்நாளில் கல்வியை துவக்கவுள்ள குழந்தைகள் முன்பாக பென்சில், பேனா, சிறிய தொழிற் கருவிகள் போன்றவற்றை வைத்து அவற்றில் ஏதாவது ஒன்றை எடுக்கச் சொல்வா். குழந்தை எடுக்கும் பொருளில் அடிப்படையில் அதன் ஆா்வமும், எதிா்காலமும் அமையும் என்பது நம்பிக்கை. உதாரணமாகப் பேனாவை எடுத்தால், பொிய கல்விமானாக ஆவான் என்றும், சங்கீத உபகரணங்களை எடுத்தால், சங்கீத மேதையாக, தொழில்முனைவோராக ஆவான் என்றும் நம்பப்படுகிறது.