பதிவு செய்த நாள்
13
பிப்
2024
05:02
திருப்பதி; திருமலையில் ஆண்டுதோறும் சூரியனின் பிறந்த நாளாக கொண்டாடப்படும் ரத சப்தமியை தேவஸ்தானம் வெகு விமரிசையாக நடத்தி வருகிறது. அன்றைய நாளில், ஏழுமலையானின் உற்சவமூர்த்தியான மலையப்ப சுவாமி, ஏழு வாகனங்களில் மாடவீதியில் எழுந்தருளி சேவை சாதிப்பது வழக்கம். வரும் 16ம் தேதி ரதசப்தமியை முன்னிட்டு TTD விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. பிப்ரவரி 16ம் தேதி முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் குழந்தைகளின் பெற்றோர்களுக்கான சிறப்பு தரிசனம் ரத்து. பொது பக்தர்களின் வசதியை கருத்தில் கொண்டு, பிப்ரவரி 15 முதல் 17ம் தேதி வரை திருப்பதியில் உள்ள கவுன்டர்களில் சர்வதர்ஷன் டோக்கன்கள் வழங்கப்படாது. கியூ காம்ப்ளக்ஸ்-2 வழியாக பக்தர்கள் சுவாமியை நேரடியாக தரிசிக்கலாம்.
விழா தினத்தில் காலை 5.30 மணி முதல் 8 மணி வரை சூரிய பிரபையிலும், 9 முதல் 10 மணி வரை சின்னசேஷத்திலும், 11 முதல் 12 மணி வரை கருட வாகனத்திலும், மதியம் 1 மணி முதல் 2 மணி வரை அனுமன் வாகனத்திலும் பக்தர்களுக்கு ஸ்ரீ மலையப்பசுவாமி அருள்பாலிக்க உள்ளார். புஷ்கரிணியில் பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரை சக்கர ஸ்நானம் செய்யப்படுகிறது. பின்னர் மாலை 4 மணி முதல் 5 மணி வரை கல்பவிருட்ச வாகனங்களிலும், 6 முதல் 7 மணி வரை சர்வபூபால வாகனத்திலும், இரவு 8 முதல் 9 மணி வரை சந்திரபிரபை வாகனத்திலும் அருள்பாலிக்க உள்ளார் மலையப்பசுவாமி. ரதசப்தமி தினத்தை முன்னிட்டு ஸ்ரீவாரி கோவிலில் கல்யாணோத்ஸவம், ஊஞ்சல்சேவை, சஹஸ்ர சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.