நாளை ரதசப்தமி; எருக்க இலை வைத்து குளிங்க.. பகலவனைக் கண்ட பனி போல் மறையும் பாவங்கள்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15பிப் 2024 02:02
எல்லா தெய்வங்களுக்கும் ஜெயந்தி தினம் கொண்டாடும் ஆன்மிகர்கள், சூரியனுக்கும் ஒரு ஜெயந்தி தினத்தைக் கொண்டாடி மகிழ்கிறார்கள். அந்த நாள்தான் ரதசப்தமி. உத்ராயன தை அமாவாசைக்குப் பின்வரும் ஏழாவது நாள் (சப்தமி திதி) ரதசப்தமி என்று போற்றப்படுகிறது. சூரியன் தன் வடக்கு நோக்கிய பயண ஆரம்பத்தில், இந்த சப்தமி திதியிலிருந்துதான் தன் ஒளிக்கதிர்களுக்கு வெப்பத்தை சிறுகச் சிறுகக் கூட்டுகிறான் என்று சாஸ்திரம் கூறுகிறது. இதை அறிவியலும் ஏற்றுக்கொள்கிறது. ஆயுள், ஆரோக்யம் தரும் விரதங்கள் ஆண்டில் பல வந்தாலும் அனைத்திலும் சிறந்ததாகச் சொல்லப்படுவது ரத சப்தமி விரதமே. தெற்குப் பாதையில் பயணிக்கும் சூரியன், அன்றுமுதல் வடக்கு வழியில் திசை திரும்பிப் பயணிப்பதாக ஜோதிட புராண நூல்கள் சொல்கின்றன. அதாவது அன்றுதான் தட்சிணாயன காலம் முடிந்து உத்தராயண காலம் ஆரம்பமாகிறது. அன்று சூரிய உதய நேரத்தில் எழுந்து ஆறு, ஏரி அல்லது குளத்தில் நீராடச் செல்வது சிறப்பு. இயலாதவர்கள் அவரவர் இல்லத்தில் சிறிதளவாவது சூரிய ஒளிபடும் இடத்தில் நீராடலாம். நீராடும்போது, ஏழு எருக்கிலைகளை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி, அவற்றின் மீது சிறிது அரிசி, மஞ்சள் ஆகியவற்றை வைத்து அதனை அப்படியே உச்சந் தலையில் வைத்துக் கொண்டு நீரில் மூழ்கி எழவேண்டும். வீட்டில் நீராடும் போது அவற்றைத் தலையில் வைத்துக் கொண்டபின், தண்ணீர் ஊற்றிக்கொண்டு குளிக்கலாம். இப்படிச் செய்வதால் நம் பாவங்கள் விலகி பகலவனைக் கண்டு பனி மறைவது போல மறைந்து போகும். புண்ணிய பலன்கள் பெருகும் என்பது ஐதிகம்.