ஸ்ரீரங்கத்தில் மாசி கருட சேவை; வெள்ளி கருடவாகனத்தில் ரங்கநாதர் உலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16பிப் 2024 11:02
திருச்சி; ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் மாசி தெப்பத் திருவிழா கடந்த பிப்ரபரி 12ம் தேதி துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் நேற்று வெள்ளி கருட சேவை நடைபெற்றது.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் மாசி தெப்பத்திருவிழாவின் நான்காம் நாளான நேற்று காலை 6.30 மணிக்கு ஸ்ரீநம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து பல்லக்கில் புறப்பட்டு உள் திருவீதிகளில் வலம வந்து வழிநடை உபயங்கள் கண்டருளினார். நண்பகல் மூலத்தோப்பு, மேலூர் ரோடு, காசுக்கடை செட்டியார் ஆஸ்தான மண்டபம் வந்தடைந்தார். அங்கு அவருக்கு சிறப்பு திருவாரதனங்கள் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு ஸ்ரீநம்பெருமாள் வெள்ளி கருட வாகனத்தில் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக உள்வீதியை வலம் வந்து இரவு வாகன மண்டபம் சென்றடைந்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஒரு ஆண்டில் ஸ்ரீநம்பெருமாள் நான்கு முறை கருட வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். இதில் 3 முறை தங்க கருட வாகனத்திலும், மாசி மாத தெப்பத் திருவிழாவின் போது வெள்ளி கருட வாகனத்திலும் மக்களுக்கு காட்சியளிப்பார். ஸ்ரீ நம்பெருமாளை வெள்ளி கருட வாகனத்தில் தரிசித்தால் காசிக்குச் சென்று வந்த பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. வெள்ளி கருட வாகன சேவையை காண தமிழகம் மட்டுமின்ற பிற மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பகதர்கள் தரிசனம் செய்தனர்.