பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்; சீர்வரிசை வழங்கிய முஸ்லிம்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16பிப் 2024 11:02
பழநி; பழநி, பெரியகலையம்புத்தூரில் பிரசித்தி பெற்ற ஐகோர்ட்டு பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோயிலில் புனரமைப்பு பணிகள் முடிந்த நிலையில் நேற்று கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவில், பெரியகலையம்புத்தூர் ஜமாத் சார்பில் முஸ்லிம்கள், கோவிலுக்கு சீர்வரிசை பொருட்கள் வழங்கினர். பள்ளிவாசலில் இருந்து வெற்றிலை, பாக்கு, பழங்கள், மற்றும் ஒரு பீரோவுடன் ஊர்வலமாக வந்த அவர்கள் கோயிலில் நடந்த சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு வழிபட்டனர். கோவில் நிர்வாகிகள் ஜமாத் நிர்வாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து உபசரித்தனர். இது குறித்து ஜமாத் நிர்வாகிகள் கூறியதாவது; எங்கள் ஊரில் இந்து முஸ்லிம் பாகுபாடு கிடையாது. அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம். பள்ளிவாசலில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு இந்துக்களுக்கு முறைப்படி அழைப்பு கொடுப்போம் என்றனர்.