செஞ்சி; சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் ரத சப்தமி விழா நடந்தது.
செஞ்சி அடுத்துள்ள சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் நேற்று ரதசப்தமி விழா நடந்தது. இதை முன்னிட்டு இன்று அதிகாலை 5 மணிக்கு ரங்கநாதருக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்தனர். காலை 6 மணிக்கு சூரிய பிரபை வாகனத்திலும், 8 மணிக்கு சேஷ வாகனத்திலும், 10 மணிக்கு கருட வாகனத்திலும், 12 மணிக்கு குதிரை வாகனத்திலும் மாட வீதிகள் வழியாக சாமி வீதி உலா நடந்தது. 1 மணிக்கு விசேஷ திருமஞ்சனமும், விசேஷ அலங்காரமும் செய்தனர். மீண்டும் மதியம் 2 மணிக்கு அனுமந்த வாகனத்திலும், 4 மணிக்கு யானை வாகனத்திலும், மாலை 6 மணிக்கு சந்திர பிரபை வாகனத்திலும் சாமி வீதி உலா நடந்தது. விழாவை அமைச்சர் மஸ்தான் துவக்கி வைத்தார். ஒன்றிய சேர்மன் விஜயகுமார், மாவட்ட கவுன்சில அரங்கஏழுமலை, ஊராட்சி மன்ற தலைவர் பராசக்தி தண்டபாணி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் குணசேகரன், ஹிந்து சமய அறநிலைத்துறை எழுத்தர் இளங்கீர்த்தி மற்றும் உபயதாரர்கள் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.