முஸ்லிம்களின் ஐந்து கடமைகளில் உன்னதமானது "ஹஜ் எனும் இறுதிப் பயணம். உலகம் முழுக்க உள்ள முஸ்லிம்கள் அரேபிய மண்ணில் கூடி, அல்லாஹ்வை வணங்கி இறுதிக் கடமையை நிறைவேற்றி வருகிறார்கள். இதையொட்டி உலகம் முழுவதும் ஹஜ் திருநாள் கொண்டாடப்படுகிறது. இதை "பக்ரீத் என்றும் "தியாகத்திருநாள் என்றும் சொல்கிறார்கள். பக்ரி+ ஈத்= பக்ரீத் என்று இதனைப் பிரிக்கலாம். "பக்ரி என்றால் "ஆடு. இந்தியாவில் பெரும்பாலும் ஆட்டை குர்பானி செய்வதாலேயே இந்தப் பெயர் இங்கே நின்று நிலவுகிறது.
தியாக வரலாறு: இந்த திருநாளுக்குப் பின்னணியில், ஒரு தியாக வரலாறு இருக்கிறது. ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே அரபு நாட்டில் நடந்த சம்பவம் இது. ஹஜ்ரத் இப்ராஹிம்(அலை) அவர்களின் குடும்பத்தினர் செய்த தியாகங்கள் மார்க்கச் செயல்களாக விதிக்கப்பட்டு இத்திருநாளிலே நினைவூட்டப்படுகின்றன. நபி இப்ராஹிம்(அலை) அவர்கள், தனது மகன் இஸ்மாயில்(அலை) அவர்களை அல்லாஹ்வின் ஆணைக்கு இணங்க பலியிட எத்தனித்த நிகழ்வை தியாகத்திருநாளாக நினைவுபடுத்தி ஆடு,மாடு, ஒட்டகம் இவைகளை அறுத்து "குர்பானி தரப்படுகிறது. இந்த குர்பானி கொடுக்க தகுதி என்னவென்றால், வசதி படைத்தவர்கள் அதாவது எல்லா செலவுகளும் போக, ரூ.5 ஆயிரம் ரொக்கம் இருந்தாலே அவர்களுக்கு இது அவசியம் என்கிறது ஷரிஅத். உற்றார், உறவினர், ஏழைகளை இந்நாளிலே மறக்கக் கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில், இந்த குர்பானி கொடுக்கும் நிகழ்வு அமைந்திருக்கிறது.