பதிவு செய்த நாள்
21
பிப்
2024
12:02
பரமக்குடி; பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயிலில் பூச்சொரிதல் மற்றும் பங்குனி விழாக்கள் மார்ச் மாதங்களில் நடக்க உள்ளது. இதன்படி மார்ச் 1 பூச்சொரிதல் விழாவும், பூக்களால் அம்மன் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. மார்ச் 16 இரவு காப்பு கட்டுதல், மார்ச் 17 காலை கோயில் கொடிமரத்தில் சிங்க கொடி ஏற்றி வைக்கப்பட்டு பங்குனி விழா துவங்குகிறது. அன்று தொடங்கி தினமும் அம்மன் பூதகி, சிம்மம், பல்லக்கு, அன்னம், ரிஷபம், யானை, கிளி, காமதேனு வாகனங்களில் வீதியுலா வருகிறார். 4 ம் நாளான மார்ச் 20 காலை அம்மன் காளி அலங்காரத்திலும், மாலை 5:00 மணிக்கு இரட்டை மாட்டுகள் பூட்டிய வண்டியில் வண்டி மாகாளி, சூரசம்ஹாரம் நடக்கிறது. மார்ச் 24 இரவு குதிரை வாகனத்தில் ராஜாங்க திருக்கோலமும், மார்ச் 25 காலை தொடங்கி அக்னி சட்டி ஊர்வலம், இரவு 8:00 மணிக்கு மின் தீப அலங்கார தேரில் நான்கு மாட வீதிகளில் அம்மன் சர்வ அலங்காரத்துடன் வலம் வருவார். மறுநாள் அதிகாலை கள்ளர் திருக்கோலத்துடன் வைகை ஆற்றில் அம்மன் எழுந்தருளி, இரவு கொடி இறக்கத்துடன் விழா நிறைவடையும். மேலும் மார்ச் 27 அதிகாலை 4:00 மணி தொடங்கி, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்தி, 11:00 மணிக்கு பாலாபிஷேகம் நடக்க உள்ளது. ஏற்பாடுகளை தேவஸ்தான பரம்பரை டிரஸ்டிகள், ஆயிர வைசிய சபையினர் செய்து வருகின்றனர்.