திருச்செந்தூர் மாசித் திருவிழா; சிவப்பு சாத்தி கோலத்தில் சண்முகர் உலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21பிப் 2024 12:02
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழாவையொட்டி நேற்று சுவாமி சண்முகர் சிவப்பு சாத்தி கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை, மாலையில் சுவாமி வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். ஏழாம் திருவிழாவான நேற்று காலை 4:30 மணியளவில் சுவாமி சண்முகர் உருகு சட்ட சேவை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து காலை 8:45 மணியளவில் சுவாமி சண்முகர் வெற்றி வேர் சப்பரத்தில் எழுந்தருளினார். பின்னர் பிள்ளையன் கட்டளை மண்டபத்தில் சுவாமி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடந்தது. மாலை 4:30 மணியளவில் மண்டபத்திலிருந்து சுவாமி சண்முகர் தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி ரத வீதிகளில் உலா வந்தார். இன்று 8ம் திருநாளில் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளுகிறார். 23ம் தேதி தேரோட்டமும் 24ம் தேதி தெப்பத் திருவிழாவும் நடக்கிறது.