பதிவு செய்த நாள்
27
அக்
2012
10:10
திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களுக்கு குத்தகை பாக்கி செலுத்தாதவர்கள் பட்டியலை வெளியிட, கோவை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் புகழேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.திருப்பூர் மாவட்டத்தில், பட்டியல் இன கோவில்கள் 117, பட்டியல் இனமில்லாத சிறிய கோவில்கள் 1,117 உள்ளன. கோவில்களில் தினமும் பூஜைகள் உள்ளிட்ட பணிகள் தொய்வில்லாமல் நடக்கும் வகையில், விவசாயம் உள்ளிட்ட வருவாய் அளிக்கும் வகையிலான நிலங்கள் தானமாக வழங்கப்பட்டன. இந்நிலங்கள் மூலம் கிடைக்கும் வருவாய் மூலம் கோவில்களில் பூஜைகள், விழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன.பல ஆண்டுகளுக்கு முன் குத்தகைக்கு விடப்பட்டதால், சொற்ப அளவிலான தொகையே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் கோவிலுக்கு சொந்தமான வீடுகளுக்கு, மாதம் வெறும் ஐந்து ரூபாய் முதல் 75 ரூபாய் வரை மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.அதேபோல், கோவில்களுக்கு சொந்தமான விவசாய நிலங்களுக்கும் ஏக்கருக்கு 200 ரூபாய் என்ற அளவிலேயே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நிர்ணயிக்கப்பட்டுள்ள சொற்ப அளவிலான தொகையை கூட, முறையாக செலுத்தாமல், குத்தகைதாரர்கள் மோசடி செய்து வருகின்றனர்.
மாவட்டத்தில் உள்ள கோவில்களுக்கு 40 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் சொந்தமாக உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.இவற்றை கண்டறிந்து மீட்பது குறித்து தற்போது விழிப்புணர்வு ஏற்பட்டு, நடவடிக்கைகள்எடுக்கப்பட்டு வருகின்றன.பல ஆண்டுகளாக கோவில் நிலங்களை அனுபவித்து வருபவர்கள், தங்கள் பெயருக்கு பெயர் மாற்றியும், குத்தகை தராமல் வழக்குகள் நடத்தியும் வருகின்றனர். கோவில் நிலங்களில் 80 சதவீதம் வரை, இவ்வாறு சிக்கியுள்ளன.பட்டியல் இனமில்லாத கோவில்கள் 1117க்கும், பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் உள்ள நிலையில், 13 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளன. இதில், 9,000 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 1,038 ஏக்கர் நிலங்களுக்கு குத்தகை தராமல், டி.ஆர். ஓ., விசாரணை நடந்து வருகிறது. 50 ஏக்கர் நிலங்களுக்கு ஆர்.டி.ஓ., விசாரணை நடந்து வருகிறது. வழக்குகள் போக, மீதமுள்ள நிலங்களுக்கு குத்தகை வசூலிக்கப்பட்டுவருகிறது.சமீபகாலங்களில் கோவில்கள் மூலம் குத்தகை விடப்படும் இனங்களுக்கு, முன்னதாகவே தொகை வசூலிக்கப்படுகிறது. பல ஆண்டுகளாக, கோவில் நிலங்களை வைத்துள்ளவர்கள், பெரும்பாலும் குத்தகை செலுத்தாத நிலை உள்ளது. இவ்வாறு, பட்டியல் இனமில்லாத கோவில்களுக்கு 96 ஆயிரம் ரூபாய் குத்தகை வசூலாகாமல் நிலுவையில் உள்ளது. 117 பட்டியல் இன கோவில்களுக்கு சொந்தமாக கடைகள், வணிக வளாகங்கள், வீடுகள், நிலங்கள் என உள்ளது. மாதம்தோறும் இதன் மூலம் 50 லட்சம் ரூபாய் வரை வருவாய் வர வேண்டும். ஆனால், குத்தகைதாரர்கள் முறையாக குத்தகையை செலுத்தாமல் இழுத்தடித்துவருகின்றனர்.பல ஆண்டுகளாக கோவில்களுக்கு குத்தகை செலுத்தாமல், 40 லட்சம் ரூபாய் நிலுவையில் உள்ளது. இவற்றை வசூலிக்க, காஞ்சிபுரம் கோவிலில் செய்ததுபோல், திருப்பூர் மாவட்ட கோவில்களிலும் குத்தகை பாக்கி வைத்திருப்பவர்கள் குறித்த போட்டோ, பெயர் முகவரியுடன் கூடிய பட்டியலை சம்பந்தப்பட்ட கோவில்களில் வைக்கவும், அவற்றை போட்டோ எடுத்து அனுப்பவும் இந்து சமய அறநிலையத்துறை கோவை இணை ஆணையர் புகழேந்திரன் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, கோவில்களில் குத்தகை பாக்கி வைத்திருப்பவர்கள் குறித்து அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு வருகிறது.