பதிவு செய்த நாள்
27
அக்
2012
10:10
மணப்பாறை: வையம்பட்டி அருகேயுள்ள வைரம்பட்டி மதுரைவீரன், ஆதிகோமாலீசுவரர் மற்றும் அக்காண்டீஸ்வரி கோவிலில், ஆறாம் ஆண்டு வருடாபிஷேக விழா மற்றும் நவராத்திரி விழா நடந்தது.நவராத்திரி விழா கடந்த 16ம் தேதி துவங்கி அம்மனுக்கு தினசரி சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மீனாட்சியம்மன், விசாலாட்சி, விஷ்ணு, துர்க்கை, ஆண்டாள், மகாலட்சுமி, காமாட்சியம்மன், ராஜராஜேஸ்வரி, மகிஷாசுரமர்த்தினி, சரசுவதியம்மன் என, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்புரிந்தார்.
இறுதிநாளான, 24ம் தேதி காலை கடம் புறப்பாடும், அதன்பின் அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் தீப ஆராதனையும் நடந்தது. தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கான திருக்குறள் ஒப்பித்தல் போட்டியும், அதைத்தொடர்ந்து பரிசளிப்பு விழா நடந்தது.போட்டியில் முதல், ஐந்து இடங்களை பெற்ற மாணவர்கள் வாசுகி, கார்த்தி, கருணாகரன், ஈஸ்வரி, மகேஷ்வரன் ஆகியோருக்கு, கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் ஆதிபெரு ஆறுமுகம், செயலாளர் நாராயணன், ஏ.பி.எம்., அறக்கட்டளை தலைவர் நீலாமருதன், திருச்சி ஈ.வெ.ரா., கல்லூரி பேராசிரியர் கிருஷ்ணன், கோவில் அறங்காவலர் குழு ஒருங்கிணைப்பாளர் ஆதிபெரு பழனியப்பன் ஆகியோர் பரிசுகள் வழங்கினர். விழாவில் ஊர் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.