பதிவு செய்த நாள்
21
பிப்
2024
04:02
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் மாசி தேர் திருவிழாவிற்காக தேர் கட்டும் பணி சிறப்பு பூஜையுடன் துவங்கியது.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் மாசி பெருவிழா மார்ச் 8ம் தேதி கொடியற்றத்துடன் துவங்க உள்ளது. இதில் முக்கிய திருவிழாக்களான மயானக்கொள்ளை மார்ச் 9ம் தேதியும், தீமிதி விழா 12ம் தேதியும், திருத்தேர் வடம் பிடித்தல் 14ம் தேதியும் நடக்க உள்ளது. மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடைபெறும் தேர் திருவிழாவில் தேவர்கள் அனைவரும் தேரின் பாகங்களாக இருந்து அம்மனுக்கு விழா எடுப்பதாக ஸ்தல புராணம் கூறுகிறது. இதனால் இக்கோவிலில் ஆண்டு தோறும் புதிதாக தேர் வடிவமைத்து தேர் திருவிழா நடத்துகின்றனர். இதன் படி புதிய தேர் கட்டுவதற்கான பணிகள் நேற்று துவங்கின. இதை முன்னிட்டு சிறப்பு யாகமும், தேர்சக்கரங்களுக்கு புனித நீர் தெளித்து சிறப்பு பூஜையும் நடந்தது. இந்நிகழ்ச்சியில் ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழு தலைவர் சுரேஷ், அறங்காவலர்கள் மதியழகன், ஏழுமலை, பச்சையப்பன், சரவணன், வடிவேல், சந்தானம், கண்காணிப்பாளர் வேலு, மேலாளர் மணி, சதீஷ் மற்றும் கோவில் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.