திருக்கோஷ்டியூரில் நாளை வெண்ணெய்த்தாழி சேவை; பெண்கள் விளக்கேற்றி வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22பிப் 2024 01:02
திருக்கோஷ்டியூர்; திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயில் மாசித் தெப்ப உத்ஸவத்தை முன்னிட்டு நாளை வெண்ணெய்தாழி சேவை நடைபெறும். பக்தர்கள் தெப்பக்குளப்பகுதியில் விளக்கேற்றி சுவாமியை பிரார்த்தித்து வருகின்றனர்.
சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் தெப்ப உத்ஸவம் பிப். 15 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி காலை 9:00 மணிக்கு சுவாமி புறப்பாடும், இரவில் கனங்களில் சுவாமி திருவீதி புறப்பாடும் நடைபெறுகிறது. நேற்று மாலை தெப்பக்குளத்தில் தெப்பத்திற்கு முகூர்த்தக்கால் ஊன்றி, தெப்பம் கட்டும் பணி துவங்கியது. ராஜகோபுர வாசலில் மாலையில் சுவாமி எழுந்தருளி சூரிய ஒளியால் அபிேஷகம் நடந்தது. இரவில் தங்கப்பல்லக்கில் சுவாமி ஸ்ரீதேவி,பூதேவியருடன் திருவீதி வலம் வந்தார். இன்று காலை திருவீதி புறப்பாடும், இரவு 8:00 மணிக்கு அரண்மனை மண்டகப்படி சார்பில் குதிரை வாகனத்தில்திருவீதி உலாவும் நடைபெறும். நாளை காலை 9:00 மணிக்கு பெருமாள் வெண்ணெய்த்தாழி அலங்காரத்தில் கோயிலிருந்துபுறப்பட்டு, தெப்பக்குளக்கரை மண்டபம் எழுந்தருளுகிறார். தொடர்ந்து காலை 10:10 மணி அளவில் தெப்பம் முட்டுத்தள்ளுதல் நடைபெறும். கடந்த சில நாட்களாகவே தெப்பக்குளத்தின் தெற்கு கரையில் பெண்கள் குடும்பம்,குடும்பமாக வந்து விளக்கேற்றி ஏற்றி வேண்டுதலை நிறைவேற்ற வேண்டினர். திருமகள் தாயாருக்கு விளக்கு ஏற்றி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் தொன் நம்பிக்கையாக உள்ளது. பிப்.24 ல் பகல் தெப்பமும், இரவு தெப்பமும் நடைபெறும். பிப்.25 ல் தீர்த்தவாரியுடன் உத்ஸவம் நிறைவடையும்.