பதிவு செய்த நாள்
22
பிப்
2024
01:02
அம்பாசமுத்திரம்; மன்னார் கோவில் ராஜகோபால சுவாமி கோயிலில் குலசேகர ஆழ்வார் அவதார தினமான நேற்று ‘கோவிந்தா - பாண்டுரங்கா’ பக்தி கோஷம் முழங்க தெப்ப உற்சவம் கோலாகலமாக நடந்தது.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தை அடுத்த மன்னார் கோவில், ராஜகோபால சுவாமி குலசேகர ஆழ்வார் கோயிலில் குலசேகர ஆழ்வார் அவதரித்த மாசி புனர்பூச நட்சத்திரமான நேற்று காலை ஆறாவது கால யாகசாலை பூஜை, சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.
பின்னர், குலசேகர ஆழ்வாருக்கு மரியாதை செலுத்தும் வைபவம் நடந்தது. இரவில், கோயிலில் இருந்து ராஜகோபால சுவாமி, ஆண்டாள், கருடாழ்வார் தோளுக்கிணியான் வாகனத்திலும்,குலசேசர ஆழ்வார் அலங்கரிக்கப்பட்ட வாகனத்திலும் எழுந்தருளி தெப்பத்தை வந்தடைந்தனர். சிறப்பு தீபாராதனையை அடுத்து சுவாமி, அம்பாள், குலசேகர ஆழ்வார் ‘கோவிந்தா, பாண்டுரங்கா’ கோஷங்கள் முழங்க 12 முறை தெப்பத்தை வலம் வந்தனர். கரூர் மாவட்ட தலைமை நீதிபதி சண்முகசுந்தரம், சோகோ தலைமை நிலைய செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு, ஆர்ஷ வித்ய வர்ஷினி ஜெயசங்கர் நாராயணன் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் ராம்குமார் மற்றும் பெரிய நம்பி திருமாளிகையினர் செய்திருந்தனர்.