பதிவு செய்த நாள்
27
பிப்
2024
11:02
திருவனந்தபுரம் : கேரள மாநிலம் ஆற்றுகால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் விழா நேற்றுடன் நிறைவடைந்ததை அடுத்து, யானை அணிவகுக்க, பக்தர்களின் பிரமாண்ட ஊர்வலம் நடந்தது.
பெண்களின் சபரிமலை எனப்படும், கேரள மாநிலம் திருவனந்தபுரம் கிள்ளியாற்றின் கரையில் அமைந்த ஆற்றுகால் பகவதி அம்மன் கோவிலில் நடந்த மாசி திருவிழாவில் ஏராளமான பெண்கள் பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர். மதுரையை எரித்த கண்ணகி கொடுங்கல்லுார் செல்லும் வழியில் கிள்ளியாற்றின் கரையில் தங்கியதாகவும், பின்னர் முதியவரின் கனவில் வந்து கூறியதன் அடிப்படையில், இங்கு அவருக்கு கோவில் எழுப்பியதாகவும் தல வரலாறு கூறுகிறது. இதை உறுதி செய்யும் வகையில் இங்கு நடக்கும் பொங்கல் விழாவில், முக்கிய நிகழ்வாக கண்ணகி தோற்றம் பாட்டு பாடப்படுகிறது. மாசிப்பூரம் நாளில் அம்மனுக்கு பிரசித்தி பெற்ற பொங்கல் விழா நடக்கிறது. பெண்கள் மட்டுமே பங்கேற்கும் இந்நிகழ்வு, இரண்டு முறை கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது. இந்தாண்டுக்கான மாசி திருவிழா பிப்., 17ல் காலை, அம்மனை காப்பு கட்டி குடியிருத்தும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. ஒன்பதாம் நாள் விழாவான நேற்று பொங்கலிடும் விழா நடந்தது. இதற்காக கேரளா, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த ஏராளமான பெண்கள் கோவிலை சுற்றி, 10 கி.மீ., துாரத்திற்கு அடுப்பு வைத்து பொங்கல் வைத்தனர். வெள்ளை சோறு, சர்க்கரை பாயசம், கொழுக்கட்டை போன்றவற்றை படைத்தனர். மதியம் 2:00 மணிக்கு கோவிலில் இருந்து புறப்பட்ட நுாற்றுக்கணக்கான பூஜாரிகள், இவற்றில் தீர்த்தம் தெளித்தனர். நேற்றுடன் நிறைவடைந்ததை அடுத்து, யானை அணிவகுக்க, பக்தர்களின் பிரமாண்ட ஊர்வலம் நடந்தது.