பதிவு செய்த நாள்
27
பிப்
2024
12:02
சென்னை; திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தி.நகர் பத்மாவதி தாயார் கோவிலில் குங்கும அர்ச்சனை சிறப்பாக நடைபெற்றது. நாளை பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
சென்னை, தி.நகரில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் பத்மவதி தாயார் கோவில் நிர்மாணிக்கப்பட்டு கடந்த ஆண்டு சம்ப்ரோக்ஷணம் விமர்சையாக நடந்தது. அதன் முதலாம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு பத்மாவதி தாயார் பிரம்மோற்சவம் நடத்தப்படுகிறது. முதலாம் ஆண்டு சம்ப்ரோக்ஷண நிறைவு விழாவை முன்னிட்டு ஒன்பது நாட்கள் பிரம்மோற்சவம் கொண்டாடப்படுகிறது. இன்று காலை 9:00 மணிக்கு குங்கும அர்ச்சனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து விஷ்வக்சேன அராதனை, அங்குரார்ப்பணம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நாளை 28ம் தேதி காலை 8:00 மணி முதல் 11:30 மணிக்குள் துவஜாரோஹணம் எனும் கொடியேற்றம் நடக்கிறது. 29ம் தேதி முதல் மார்ச், 6ம் தேதி வரை தினசரி காலை 9:00 மணிக்கும், இரவு 7:00 மணிக்கும் வாகன புறப்பாடு நடக்கிறது. இதில் மார்ச், 4ம் தேதி மாலை கருட வாகன புறப்பாடும், 6ம் தேதி ரத உற்சவமும் நடக்கிறது. மார்ச், 3ம் தேதி கஜ வாகன புறப்பாடு மாடவீதிகளை வலம் வருகிறது. ஆரத்தி எடுக்கும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது. வரும், 29ம் தேதி முதல் மார்ச், 6ம் தேதி வரை தினமும் மதியம், 12:30 மணி முதல் 2:00 மணி வரை ஸ்நபன திருமஞ்சனம் நடக்கிறது. வரும், 28ம் தேதி முதல் மார்ச், 5ம் தேதி வரை தினமும் மாலை, 5:00 மணி முதல் 6:00 மணி வரை ஊஞ்சல் உற்சவம் நடத்தப்படுகிறது. பிரம்மோற்சவத்தின் அனைத்து நாட்களும் மாலை 6:0 மணி முதல் இரவு 7:00 மணிவரை இசை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. தினசரி மாலை அன்னதானம் வழங்கப்படுகிறது. மார்ச், 7ம் தேதி சக்ர ஸ்நாதனமும், 8ம் தேதி புஷ்ப யாகமும் நடக்கிறது என பத்திரிக்கையாளர்களை சந்தித்த டி.டி.டி., தமிழக, புதுச்சேரி ஆலோசனைக்குழு தலைவர் சேகர் கூறியனார்.