மணப்புள்ளிக்காவு பகவதி அம்மன் கோவில் திருவிழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01மார் 2024 10:03
பாலக்காடு; மணப்புள்ளிக்காவு பகவதி அம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக நடந்தது.
கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ளது பிரசித்தி பெற்ற மணப்புள்ளிக்காவு பகவதி அம்மன் கோவில். இங்கு எல்லாம் ஆண்டும் மாசி மாதம் வேல என்ற பெயரில் திருவிழா நடப்பது வழக்கம். நடப்பாண்டு திருவிழா நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. அதிகாலை கணபதி ஹோமத்துடன் விழா ஆரம்பித்தனர். தொடர்ந்து 6.30க்கு நாதஸ்வர கச்சேரி, 7க்கு பரிவார பூஜை, 9 க்கு கிழக்கூட்டு அனியன் மாரார் தலைமையில் பஞ்சாரிமேளம் என்று அழைக்கப்படும் 50க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்ட செண்டை மேளம் முழங்க ஏழு யானைகள் அணிவகுப்பு உடன் நடந்த காழ்ச்சீவேலி நடந்தன. 10க்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வு நடந்தன. 11.30 க்கு மேற்கு யாக்கரை ஸ்ரீமூலஸ்தானத்தில் இருந்து அம்மனின் வாளும் பீடமும் எழுந்தருளும் வைபவம் நடந்தது. தொடர்ந்து 12.30 அம்மனுக்கு பூர்ண சந்தாபிஷேகம் நடைபெற்றது.
மாலை 3.45 மணிக்கு மணப்புள்ளி பகவதி அம்மன் கோவிலில் இருந்து 15 யானைகளின் அணிவகுப்பு உடன் அம்மன் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து 5 மணி அளவில் திருவிழாவின் சிறப்பு அம்சமாக கோட்டைமைதான வாசலில் கிழக்கு நோக்கியவாறு பரய்க்காடு தங்கப்பன் மாரார் தலைமையில் பஞ்சவாத்தியம் முழங்க ஆடை ஆபரணங்கள் அணிந்த 15 யானைகள் அணிவகுத்து நின்று பிரம்மாண்ட முத்துமணி வண்ணக் குடை மாற்றம் நிகழ்ச்சி நடந்தது. இதை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு மகிழ்ந்தனர். இதன் இடையே மேற்கு யாக்கரை, கொப்பம், வடக்கந்தரை, முட்டிக்குளங்கரை, கள்ளிக்காடு ஆகிய பகுதிகளில் இருந்து உள்ள 15 யானைகளின் அணிவகுப்பு கோட்டை மைதானத்தில் நடந்தது. இரவு வானவேடிக்கையுடன் விழா நிறைவடைந்தது.