பெண்களின் சபரிமலை மண்டைக்காடு பகவதி அம்மன் மாசி கொடை விழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04மார் 2024 10:03
நாகர்கோவில், : பெண்களின் சபரிமலை என்று புகழப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி கொடை விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் புதுச்சேரி கவர்னர் தமிழிசை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான இக்கோயிலில் கேரளாவில் இருந்து பெண்கள் இருமுடி கட்டு ஏந்தி கடலில் குளித்து அம்மனுக்கு பொங்கலிட்டு வழிபடுவதால் இதை பெண்களின் சபரிமலை என்று அழைக்கின்றனர். இங்கு மாசிக் கொடை விழா நேற்று காலை 8:15 க்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோயில் பூஜாரிகள் கொடி மரத்தில் கொடியேற்றிய போது திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மே நாராயணா, தேவி நாராயணா என்று முழக்கமிட்டனர். இதில் புதுச்சேரி கவர்னர் தமிழிசை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஹைந்தவ ஹிந்து சேவா சங்கம் சார்பில் 87-வது ஹிந்து சமய மாநாட்டை கவர்னர் தமிழிசை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். மார்ச் 12 வரை கொடை விழா பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நடைபெறுகிறது. தினமும் மூன்று கால பூஜை , அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. ஒன்பதாம் நாள் விழாவில் பெரிய சக்கர தீவட்டி ஊர்வலம் நடைபெறும். மார்ச் 13 அதிகாலை 12:00 மணிக்கு ஒடுக்கு பூஜையுடன் விழா நிறைவுறும். விழாவையொட்டி ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.