திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் துர்கா ஸ்டாலின் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05மார் 2024 04:03
மயிலாடுதுறை; திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் சிறப்பு வழிபாடு நடத்தினார்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற இங்கு மார்க்கண்டேயருக்காக சிவபெருமான் கால சம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி எமனை வதம் செய்ததால் அட்ட வீரட்ட தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இங்கு சிறப்பு ஹோமங்கள் நடத்தி சுவாமி அம்பாளை வழிபட்டால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் வந்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து கோவிலுக்குள் சென்ற துர்கா ஸ்டாலின் சுவாமி, கால சம்ஹார மூர்த்தி, அபிராமி சன்னதியில் தனது பெயரிலும் சக குடும்பத்தினர் பெயரிலும் சங்கல்பம் செய்து சிறப்பு வழிபாடு நடத்தினார். தொடர்ந்து தருமபுரம் ஆதீன கட்டளை சுப்பிரமணிய தம்பிரான் சுவாமிகள் அபிராமி அம்பாள் படம் மற்றும் பிரசாதங்களை வழங்கினார்.