திருப்புவனம் மாரியம்மன் கோயில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05மார் 2024 03:03
திருப்புவனம்; திருப்புவனம் புதூர் எல்லை காவல் தெய்வமான ரேணுகாதேவி பூமாரியம்மன் கோயில் மாசி திருவிழா நேற்று இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருப்புவனம் நகரின் காவல் தெய்வமான ரேணுகாதேவி பூமாரியம்மன் கோயிலில் வருடம்தோறும் மாசி மாதம் பத்து நாட்கள் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்தாண்டு திருவிழா நேற்று இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. இரவு 8:50 மணிக்கு கொடிமரத்திற்கு பால், பன்னீர், தயிர், சந்தனம் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டு கொடியேற்றப்பட்டது. கொடியேற்றத்திற்கு பின் கொடி மரத்திற்கு தீபாராதனை காட்டப்பட்டது. அதன்பின் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய பூ மாலைகள் கொடிமரத்திற்கு அணிவிக்கப்பட்டது. நேர்த்திகடன் செலுத்தும் பக்தர்கள் காப்பு கட்டிக் கொண்டனர். கொடியேற்ற வைபவத்தை பாபு பட்டர் நடத்தி வைத்தார். பத்து நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினசரி சுற்றுவட்டார கிராமமக்கள் பலரும் அக்னிசட்டி, ஆயிரம் கண் பானை ஏந்தி வந்து நேர்த்திகடன் செலுத்துவார்கள், வரும்12ம் தேதி பொங்கல் விழா நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை மேலாளர் இளங்கோ, தேவஸ்தான கண்காணிப்பாளர் வேலுச்சாமி, மற்றும் கிராமத்தார்கள் செய்து வருகின்றனர்.