பதிவு செய்த நாள்
29
அக்
2012
11:10
குன்னூர்: குன்னூர் கிருஷ்ணர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. குன்னூர் கிருஷ்ணாபுரத்தில் உள்ள கிருஷ்ணர் கோவில் நூற்றாண்டு பழமை வாய்ந்தது. இந்த கோவிலின் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கடந்த 25ம் தேதி காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரை கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், திரவியாகுதி, மகாபூரணாகுதி, தீபாராதனை நடந்தது. மாலை 4.30 மணி முதல் 7.30 மணி முதல் மகளிர் குழுக்கள் மூலம் சந்தசஷ்டி பாராயணம் மற்றும் விளக்கு பூஜை நடந்தது. 26ம் தேதி காலை 10 மணியிலிருந்து 1 மணி வரை குன்னூர் கன்னி மாரியம்மன் கோவிலிருந்து மேள தாளம், செண்டை மேளம், முளைப்பாரி தீர்த்த குடம் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. மாலை 6.45 மணிக்கு முதல் காலயாக சாலை பூஜைகள் மற்றும் அருளுரை நடந்தது. 27ம் தேதி காலை 2ம் கால யாகசாலை பூஜைகளும், அஷ்டபந்தன மருந்து சாத்துதல், அருளுரை, 3ம் கால யாக சாலை பூஜை, தீபாராதனைகள் மற்றும் பிரசாத வினியோகம் நடந்தது. நேற்று காலை 6 மணி முதல் 9 மணி வரை 4ம் கால மூல மந்திர காயத்திரி மந்திர ஹோமம், நாடி சந்தானம், மகா தீபாரதனைகள் நடந்தன. பின்னர் கலசங்கள், யாக சாலையிலிருந்து புறப்பட்டு கிருஷ்ணர் கோயில் வந்தடைந்தது. காலை 9 மணியிலிருந்து 10.45 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதன் தொடர்ச்சியாக மகா அபிஷேகம், தசதானம், தசதரிசனம் ஆகிய 10 தரிசனங்கள் நடந்தன. பகல் 1 மணிக்கு கோவில் வளாகத்தில் அன்னதானம் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர், திருப்பணிக்குழு, விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.