பதிவு செய்த நாள்
29
அக்
2012
11:10
புதுக்கோட்டை: மாத்தூர் செங்கலாக்குடி முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விமர்சையாக நேற்று நடந்தது.புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் அருகே செங்கலாக்குடியில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில், 1991ல் கட்டப்பட்டு, திருமுருக கிருபானந்த வாரியார் தலைமையில், கும்பாபிஷேகம் நடத்தி, அப்போதைய மாவட்ட கலெக்டர் ஷீலாராணி சுங்கத், மறைந்த பிரேமானந்தா சாமியார் ஆகியோர் முன்னிலையில் திறக்கப்பட்டது.22 ஆண்டுக்குப் பின், தற்போது கும்பாபிஷேகம் செய்ய அப்பகுதி கிராம மக்கள் முடிவு செய்தனர். அதன்படி, முத்துமாரியம்மன், செல்வவிநாயகர், முருகன், சன்னாசிகருப்பு, சப்பானிக்கருப்பு, இடும்பர், நாகம்மாள், பாப்பாத்தியம்மாள், ஆஞ்சநேயர் ஆகிய கோவில்களில் திருப்பணி நடந்தது.இலுப்பூரிலிருந்து மாத்தூர் செல்லும் சாலையில் செங்களாக்குடி பிரிவு ரோட்டில், பிரமாண்ட நுழைவு வாயில் அமைக்கப்பட்டது. கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. திருச்சியிலிருந்து காவிரி நீர் எடுத்துவரப்பட்டு, சிறப்பு வழிபாடு நடந்தது. சிவாச்சாரியார்கள் புனிதநீரை கலசத்தில் ஊற்ற, பக்தர்கள் "ஓம்சக்தி, பராசக்தி என்று கோஷம் எழுப்பினர்.அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. செங்கலாக்குடி, செ.மேலப்பட்டி, செ.மேலக்காடு, செ.புதுநகர், செ.சீத்தப்பட்டி கிராம மக்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர். கிராம முக்கிஸ்தர்கள் துரைராஜ், வேலுச்சாமி மிராஸ்தார், பஞ்சாயத்து தலைவர் மூர்த்தி, துணைத்தலைவரும், ம.தி.மு.க., இளைஞரணி அமைப்பாளருமான சேகர், முன்னாள் யூனியன் சேர்மன் ராஜேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.