பதிவு செய்த நாள்
29
அக்
2012
11:10
திருநெல்வேலி:நெல்லை சாலைக்குமரன் கோயிலில் 40க்கும் மேற்பட்ட திருமணங்கள் நேற்று நடந்தது. இதனால் ஜங்ஷன் பகுதியில் மக்கள் வெள்ளத்தில் வாகனங்கள் செல்ல முடியாமல் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.நெல்லை ஜங்ஷனில் ஈரடுக்கு மேம்பாலத்தின் அடியில் முக்கியப்பகுதியில் பாளையஞ் சாலைக்குமார சுவாமி கோயில் அமைந்துள்ளது. இங்கு சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானையுடன் அருள்பாலிக்கிறார். தினந்தோறும் கோயிலுக்கும் நூற்றுக் கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருவர்.இக்கோயிலில் திருமண முகூர்த்த நாட்களில் அதிக அளவில் திருமணங்கள் நடக்கும். திருமண முகூர்த்தம் உள்ள நாட்களில் குறைந்தது 5 முதல் அதிகபட்சமாக 60 வரையிலான திருமணங்கள் நடைபெறுவது வழக்கம். ஒரு சமயத்தில் திருமணம் நடைபெறும் போது மாப்பிள்ளை, பெண் மாறியதாக கூட செய்திகள் வந்தன.
அதிக அளவு முகூர்த்தம் உள்ள நாட்களில் திருமணம் நடைபெறும் மாப்பிள்ளை, பெண் வீட்டார், உறவினர்கள், நண்பர்கள் என பலரும் கோயிலுக்கு வருவர். இதனால் அவர்கள் வரும் வாகனங்கள் கோயில் முன்பும், அந்த ரோட்டிலும் நிறுத்தப்படுகின்றன. மேலும் கோயிலுக்குள் அதிக அளவில் கூட்டம் நிற்க முடியாது என்பதால் அந்த கூட்டத்தினரும் ரோட்டிலேயே கூடி நிற்பர். இதனால் அந்த வழியாக பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படும். அடிக்கடி கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதுண்டு. பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அந்த வழியாக செல்ல முடியாமல் பலமுறை அவதிக்குள்ளாகியுள்ளனர். இதற்கிடையே நெல்லை தாலுகா அலுவலகமும் சாலைக்குமரன் கோயிலுக்கு நேர் எதிரில் அமைந்துள்ளதால் அந்த அலுவலகத்திற்கு வரும் வாகனங்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு, முகூர்த்த நாட்களில் போக்குவரத்து நெருக்கடியில் மக்கள் சிக்கி தவிக்கின்றனர். இந்நிலையில் முகூர்த்த நாளான நேற்று 40க்கும் மேற்பட்ட திருமணங்கள் சாலைக்குமரன் கோயிலில் நடந்தது. இதனால் அந்த வழியில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. வாகனங்கள் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கின. இதனால் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.