பதிவு செய்த நாள்
21
மார்
2024
03:03
வடபழனி ஆண்டவர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, லட்சார்ச்சனை விமர்சையாக துவங்கியது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். வரும், 24ம் தேதி பங்குனி உத்திர விழா கொண்டாடப்படுகிறது. 25ம் தேதி முதல் மூன்று நாட்கள் தெப்பத் திருவிழா நடக்கிறது.
சென்னை, வடபழனியில் அமைந்துள்ளது ஆண்டவர் கோவில். முருகன் கோவில்களில் தொன்மையான தென்பழனிக்கு நிகராக இக்கோவில் புகழ்பெற்று விளங்குகிறது. இக்கோவிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்து வருகின்றனர். ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து, அலகு குத்தி வேண்டுதல் நிறைவேற்றும் தலமாகவும் திகழ்கிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர விழா விமர்சையாக நடத்தப்படுகிறது. இந்த ஆண்டிற்கான பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு இன்று முதல்,23ம் தேதி வரை லட்சார்ச்சனை நடக்கிறது. தினமும் லட்சார்ச்சனை காலை 7:30 மணிக்கு துவங்கி நண்பகல் 12:30 மணிவரையிலும், மாலை 4:30 மணிக்கு துவங்கி இரவு 8:30 மணி வரை நடை பெறுகிறது. இதில், பங்கேற்க விருப்பமுள்ள பக்தர்களிடம், அர்ச்சனை ஒன்றுக்கு,150 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அவர்களுக்கு லட்சார்ச்சனை பிரசாதம் வழங்கப்படும். பங்குனி உத்திரமான வரும், 24ம் தேதி உச்சி காலத்துடன் தீர்த்தவாரி மற்றும் யாகசாலை பூஜைகள் நிறைவு செய்யப்பட்டு, கலாசாபிஷேகத்துடன் பூஜைகள் பூர்த்தியாகின்றன. அன்று இரவு, 7:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்துடன் சுவாமி விதி உலா நடக்கிறது. வரும், 25ம் தேதி முதல், 27ம் தேதி வரை மூன்று நாட்கள் இரவு 7:00 மணிக்கு தெப்பத் திருவிழா சிறப்பு அலங்காரம், வேதபாராயண, நாதஸ்வர கச்சேரியுடன் நடக்கிறது. முதல் நாள் தெப்பத்தில் வடபழனி ஆண்டவர் புறப்பாடு நடக்கிறது. இரண்டாம் நாள் சண்முகர், வள்ளி, தெய்வானை புறப்பாடும், மூன்றாம் நாள் சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானை புறப்பாடும் நடக்கிறது.