முருகனுக்குரிய விரதங்களில் பங்குனி உத்திரமும் ஒன்று. இந்நாள் சாஸ்தா, சிவன், விஷ்ணு ஆகிய தெய்வங்களுக்குரிய நாளாகவும் அமைந்துள்ளது. சூரபத்மனை வதம் செய்த முருகன், இந்திரனின் மகளான தெய்வானையை பங்குனியில் மணம் செய்து கொண்டார். இந்தவிழா முதல் படைவீடான திருப்பரங்குன்றத்தில் பிரம்மோற்ஸவமாக கொண்டாடப்படுகிறது. தர்மசாஸ்தா அவதரித்ததும், சிவபார்வதி, லட்சுமி கல்யாணம் நடந்ததும் இந்நாளில் தான். உத்திர விரதமிருப்பதால் அனைத்து தெய்வங்களின் அருள் பூரணமாக கிடைக்கும்.
விரத முறை: பங்குனி உத்திரத்தன்று காலையில் நீராடியதுமே விரதத்தை தொடங்கி விட வேண்டும். பகலில் ஒருவேளை மட்டுமே உண்ண வேண்டும். இயலாதவர்கள் பால், பழம் சாப்பிடலாம். மாலையில் முருகன், சிவன், பெருமாள் கோயிலுக்குச் சென்று தீபமேற்றி வழிபடவேண்டும். இந்த விரதத்தால், விரைவில் திருமணயோகமும், செல்வச்செழிப்பும் உண்டாகும். 48 ஆண்டுகள் தொடர்ந்து பங்குனி உத்திர விரதமிருப்பவர்கள் பிறப்பற்ற முக்தி நிலை அடைவர் என்று விரதநூல்களில் சொல்லப்பட்டுள்ளது.