பதிவு செய்த நாள்
28
மார்
2024
07:03
ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தியை, சங்கடஹர சதுர்த்தியாக அனுஷ்டிப்பது உங்களுக்கு தெரியும். விநாயகர் வழிபாட்டிற்கு மிகவும் விசேஷம். ஆனால், சங்கஷ்ட ஹர சதுர்த்தி பற்றி தெரியுமா? அதன் வரலாறு... தேய்பிறை சதுர்த்தியின் அதிபதியான சக்தி, விநாயகரை வழிபட்டு, தனக்கும் வளர்பிறை சதுர்த்தியைப் போலவே பேறு வேண்டும் என வேண்டினாள். அப்போது விநாயகர், தேவி! சந்திர உதய காலத்தில் நீ என்னை வழிபட்டதால் கிருஷ்ணபட்ச சதுர்த்தியும், சந்திரோதயமும் கூடிய காலம் மிகவும் முக்கியமான விரத காலமாகும். அப்போது என்னை வழிபடுபவர்களுக்கு சங்கடங்களை எல்லாம் நீக்கி சர்வ மங்களங்களையும் அருளுவேன். உனக்கு சங்கஷ்ட ஹரணி என்ற பெயர் உண்டாகட்டும்! என்று அருள்புரிந்தார். அதன் காரணமாகவே, சங்கஷ்டஹர சதுர்த்தி என்று சொல்லும் வழக்கம் இருந்தது. காலப்போக்கில் சங்கடஹர சதுர்த்தி ஆகி விட்டது. அதாவது துன்பத்தைப் போக்கும் சதுர்த்தி எனப் பொருள் மாற்றம் பெற்றது.
விநாயகப் பெருமானை இந்து சமயத்தின் முழு முதற் கடவுள். தர்மம் நிலைக்க தந்தத்தை ஒடித்து பாரதக்கதையை எழுதியவர். விநாயகனை வழிபட சிறந்த நாள் சங்கடஹர சதுர்த்தி. இந்த நாளில் விநாயகரை வழிபட்டால் நினைத்தது நினைத்தபடி நடக்கும். விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபட அனைத்தும் கிடைக்கும். சங்கடஹர சதுர்த்தியின் மகிமையை முருகப் பெருமான் முனிவர்க்கு எடுத்துரைக்கிறார் ஸ்காந்தத்தில். எல்லா விரதங்களிலும் இவ்விரதம் மிகச் சிறந்தது சங்கடஹரணம் என்றும் இது அழைக்கப் பெறும். காட்டில் தருமபுத்திரர் இவ்விரதத்தை மேற்கொண்டார். பாண்டவர்க்கு இவ்விரதத்தை உபதேசித்தவர் கண்ணபிரான். முதல் முதலில் தன் தாய் பார்வதி தேவிக்குக் கணபதியே இவ்விரதத்தைச் சொல்லி அருளினார். பார்வதி ! ஆண்டுக்காலம் இவ்விரதத்தை மேற்கொண்டு தன் பதியை அடைந்தாள். இந்திரன், சிவன், இராவணன் போன்றோர் இவ்விரதத்தினால் நற்பயன் அடைந்திருக்கின்றனர். அனுமன் சீதையைக் கண்டது, தமயந்தி நளனை அடைந்தது, அகலிகை கௌதமரை அடைந்தது போன்றவை நிகழ்ந்ததும் இவ்விரதத்தின் மகிமையால் தான்.