திருப்புல்லாணி ஆதிஜெகநாதப் பெருமாள் கோயிலில் பெரிய தேரோட்டம்; பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25மார் 2024 03:03
திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயிலில் கடந்த மார்ச் 17-ல் கொடியேற்றத்துடன் பங்குனி பிரமோற்ஸவம் துவங்கி உள்ளது. நாள்தோறும் உற்ஸவர் கல்யாண ஜெகநாத பெருமாளுக்கு விசேஷத் திருமஞ்சனமும் சாற்று முறை கோஷ்டி பாராயணம் நடந்து வருகிறது. விழாவை முன்னிட்டு தினமும் காலையில் பல்லாக்கு மற்றும் இரவில் சிறப்பு வாகனங்களில் உற்ஸவர் கல்யாண ஜெகநாத பெருமாள் நான்கு ரத வீதிகளிலும் உலா வருகிறார். கடந்த மார்ச் 22 அன்று இரவு 8:00 மணிக்கு பத்மாஸனி தாயாருக்கு திருக்கல்யாண உற்ஸவம் நடந்தது. இன்று காலை 8.00 மணி அளவில் 51 அடி உயரம் கொண்ட பெரிய தேரில் உற்ஸவர்கள் ஸ்ரீதேவி, பூதேவி, கல்யாண ஜெகநாத பெருமாள் எழுந்தருளினார். தேரடியில் இருந்து காலை 9:30 மணிக்கு சிறப்பு பூஜைகளுக்கு பிறகு ஏராளமான பக்தர்கள் கோவிந்தா கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் இருப்பு நிலைக்கு வந்தவுடன் பக்தர்களின் மீது புனித நீர் தெளிக்கப்பட்டு வாழைப்பழங்கள் உள்ளிட்ட கனிகள் வீசப்பட்டன. உற்ஸவர்களை தேரில் இருந்து ஏராளமான பக்தர்கள் தேங்காய், பழம் உடைத்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் புளியோதரை பிரசாதம் வழங்கப்பட்டது. ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயில் சேவை நிலைய அறக்கட்டளையின் சார்பில் பக்தர்களுக்கு பிஸ்கட், குடிநீர் பாட்டில்கள் வழங்கப்பட்டன. ஏராளமான தன்னார்வலர்கள் கோடை வெயிலை முன்னிட்டு நீர் மோர் வழங்கினர்.