ஸ்ரீவில்லிபுத்தூர்; விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
இக்கோயிலில் திருக்கல்யாண திருவிழா மார்ச் 17ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. ஒன்பதாம் திருநாளான இன்று காலை 10:00 மணிக்கு கோயில் பட்டர்கள், கோட்டைதலைவாசல் ரேணுகாதேவி கோயிலில் இருந்து ஆண்டாளுக்கு திருக்கல்யாண பட்டுப்புடவை, ரெங்கமன்னாருக்கு வேஷ்டி மற்றும் திருமாங்கல்யத்தை பெற்று வந்தனர். பின்னர் கோயிலில் திருமஞ்சனம், சிறப்பு பூஜைகள் நடந்தது. மதியம் 3:00 மணிக்கு ரெங்கமன்னார் வீதி புறப்பாடும், வேதபிரான் பட்டர் தேங்காய் பெறுதலும், பூரண கும்பத்துடன் பெரியாழ்வார் எழுந்தருளலும் நடந்தது. மாலை 4:00 மணிக்கு அங்கமணிகளுடன் ஆண்டாள் வீதி சுற்றி வந்தார். மணவாள மாமுனிகள் சன்னதி வாசலில் மாலை மாற்றுதல் நடந்தது. பின்னர் ஆண்டாள், ரெங்கமன்னார் மணமேடையில் எழுந்தருளினர். அங்கு சிறப்பு பூஜைகள் செய்து, கன்னிகாதானம் நடந்து ஆண்டாளுக்கு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இருந்து கொண்டு வரப்பட்ட பட்டுச் சேலை சாற்றப்ட்டது. பின் பெரியாழ்வார் முன்னிலையில் இரவு 7:45 மணிக்கு திருக்கல்யாண வைபவத்தை சுதர்சன் பட்டர் தலைமையில் கோயில் பட்டர்கள் நடத்தினர். இதனை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழாவில் அறங்காவலர் குழு தலைவர் வெங்கட்ராமராஜா மற்றும் அறங்காவலர்கள், கோயில் பட்டர்கள், அறநிலையத்துறை மற்றும் பல்வேறு அரசு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.