பதிவு செய்த நாள்
26
மார்
2024
02:03
குஜிலியம்பாறை; ராமகிரி கல்யாண நரசிங்க பெருமாள் கோயில் பங்குனி தேரோட்டம் சிறப்பாக நடந்தது.
குஜிலியம்பாறை ஒன்றியம் ராமகிரியில் 900 ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்யாண நரசிங்க பெருமாள் திருக்கோயில் உள்ளது. இங்கு நரசிங்க பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, கமலவல்லி தாயார், ஆஞ்சநேயர் சன்னதிகள் உள்ளன. இங்கு திருமணமாகாதவர்கள் வந்து வேண்டிக் கொண்டால் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம். சுற்றுப் பகுதியில் பிரசித்தி பெற்ற இக்கோயிலில் பங்குனி உற்சவ திருவிழா மார்ச் 18 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. மார்ச் 24 மாலை திருக்கல்யாணமும், 25 ல் குதிரை வாகனத்தில் சுவாமி வலம் வரும் நிகழ்ச்சியும் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் இன்று நடந்தது. முன்னதாக கோவில் சன்னிதானத்தில் இருந்த கல்யாண நரசிங்க பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி, கமலவல்லி தாயார் ஆகிய சுவாமிகளுக்கு பூஜைகள் செய்யப்பட்டு திருத்தேரில் வைக்கப்பட்டது. அங்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டதை தொடர்ந்து காலை 8:30 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தேரோட்டம் நடந்த நிலையில் கோயிலை வலம் வந்து நிலையை அடைந்தது. வெள்ளிக்கிழமை புஷ்பயாக உற்சவம் பூர்த்தி விழாவுடன் திருவிழா நிறைவடைகிறது. தேரோட்ட நிகழ்ச்சியில் திருப்பணி கமிட்டி தலைவர் கருப்பணன், அறநிலைத்துறை மண்டல இணை ஆணையர் (திண்டுக்கல்) பாரதி, செயல் அலுவலர் கனகலட்சுமி, அறநிலையத்துறை ஆய்வாளர் ராஜலட்சுமி, கோயில் மணியகாரர் சதாசிவம், கோயில் மூத்த அர்ச்சகர் ராமகிருஷ்ணன், அர்ச்சகர்கள் ராஜேஷ், ரமேஷ், இளைஞர் நற்பணி மன்றத்தினர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.