பதிவு செய்த நாள்
27
மார்
2024
05:03
பழநி; பழநி திருஆவினன்குடி கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவில் திருஊடல் நிகழ்ச்சி, கொடி இறக்குதல் உடன் உற்ஸவம் நிறைவடைந்தது.
பழநி, அடிவாரம், திருஆவினன்குடி கோயிலில், பங்குனி உத்திர திருவிழா மார்ச்.18 கொடியேற்றத்துடன் துவங்கியது. உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள், ஈரோடு மாவட்டம் கொடுமுடி, காவிரி நதியிலிருந்து தீர்த்தக்காவடி எடுத்து வந்தனர். திருவிழா நாட்களில் வள்ளி, தெய்வானை முத்துக்குமாரசுவாமி, தந்த பல்லாக்கில் கிரிவீதி உலா நடைபெற்றது. மாலையில் வெள்ளி ஆட்டுக்கிடா, வெள்ளி காமதேனு, தங்கமயில், வெள்ளி யானை வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. மார்ச் 23ல் மாலை வள்ளி, தெய்வானை, முத்துக்குமாரசாமி திருக்கல்யாணம் நடைபெற்று வெள்ளி ரதத்தில் சுவாமி புறப்பாடு சன்னதி வீதி, கிரி வீதியில் நடைபெற்றது. பங்குனி உத்திர தினமான மார்ச் 24ல் தேரேட்டம் கிரிவீதியில் நடந்தது.மார்ச் 25ல் தங்க குதிரை வாகனம், மார்ச்.26ல் வெள்ளி பிடாரி மயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. மார்ச் 27 பத்தாம் நாள் திருவிழாவான இன்று காலை, வள்ளி, முத்துக்குமாரசாமி திருமண வைபவத்தால், தெய்வானை கோபித்துக் கொண்டு திருஆவினன்குடி கோயில் கதவை அடைத்த பின், தூதரான விரபாகுவாக, ஓதுவார் சிவநாகராஜன் சென்று சமாதானம் செய்து, கோயில் கதவை திறக்கும் திரு ஊடல் நிகழ்ச்சி நடைபெற்றது. கொடி இறக்குதல் உடன் உற்ஸவம் நிறைவடைகிறது.