ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28மார் 2024 11:03
ஸ்ரீவில்லிபுத்தூர்; ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விருதுநகர் மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா ஆண்டு தோறும் பங்குனி மாதம் நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு இன்று (மார்ச் 28) முதல் ஏப்ரல் 9 வரை 13 நாட்கள் பூக்குழித் திருவிழா நடக்கிறது. இதனை முன்னிட்டு இன்று காலை 4:30 மணிக்கு மகா கணபதி பூஜை, புண்யாகவாசனம், காப்பு கட்டுதல் நடந்தது. பின்னர் மாரியம்மன் கோவில் தெரு சாலியர் பொது சாவடியிலிருந்து கொடி பட்டம் புறப்பட்டு முக்கிய வீதிகள் சுற்றி கோயிலை வந்தடைந்தது. அங்கு அர்ச்சகர் சுந்தர் கொடியேற்றி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்திருந்தது. இதனைத் தொடர்ந்து தினமும் காலையில் அம்மன் மண்டகப்படி எழுந்தருளும், இரவில் வீதியுலாவும் நடக்கிறது. விழாவில் முக்கிய நிகழ்ச்சிகளான ஏப்ரல் 8ல் பூக்குழியும், ஏப்ரல் 9ல் தேரோட்டமும் நடக்கிறது.