பதிவு செய்த நாள்
28
மார்
2024
10:03
அவிநாசி; அவிநாசி வட்டம், கருவலூரில் மாரியம்மன் கோவிலில் பங்குனி தேர் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க வெகு விமர்சையாக நடைபெற்றது.
அவிநாசி ஒன்றியம், கருவலூர் ஊராட்சியில் எழுந்தருளியுள்ள மாரியம்மன் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவிலில் வருடம் தோறும் பங்குனி மாதம் தேர் விழா நடைபெறுகின்றது. இந்த ஆண்டுக்கான தேர் விழா, கடந்த 22ம் தேதி கிராம சாந்தியுடன், தொடங்கியது. அதன் பின்னர் 23ம் தேதி கோவிலில் கொடியேற்றுதல், நிகழ்ச்சியை தொடர்ந்து, சிம்மவாகனத்தில் அம்மன் எழுந்தருளுளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். 24 ,25 மற்றும் 26ம் தேதிகளில் பூத வாகனம், ரிஷப வாகனம், புஷ்ப விமான மலர் பல்லாக்கு, திருக்கல்யாணம், யானை வாகனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முக்கிய நிகழ்வான தேர் இழுக்கும் நிகழ்ச்சியில் நேற்று காலை திருத்தேருக்கு அம்மன் எழுந்தருளி காட்சியளித்தார். தேர் விழாவில், கோவில் செயல் அலுவலர் குழந்தை வேல், பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் லோகநாதன், அறங்காவலர் அர்ஜுனன்,தமிழ்ச்செல்வன், அவிநாசி டி.எஸ்.பி., சிவகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, மாலை 6 மணிக்கு , ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஓம் சக்தி பராசக்தி" என வின்னதிர கோஷத்துடன்,தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் நிலையிலிருந்து கிழக்கு ரத வீதிக்கு பக்தர்களால் இழுத்து நிறுத்தப்பட்டது. இன்று கிழக்கு ரத வீதியில் இருந்து மேற்கு ரத வீதிக்கும், நாளை மேற்கு ரத வீதியில் இருந்து தேர் நிலைக்கும் பக்தர்களால் வடம் பிடித்து நிலை வந்து சேரும். மேலும், 30ம் தேதி தொப்போற்சவம், காமதேனு வாகனம், பரிவேட்டை, 31ம் தேதி அம்பாள் சப்பரத்தில் புறப்படுதல், மஞ்சள் நீராடுதல், கொடி இறக்கத்தை தொடர்ந்து, ஏப்ரல் 3ம் தேதி பாலாபிஷேகம், மறு பூஜையுடன் தேர்விழா நிறைவு பெறுகின்றது. பங்குனி தேர் விழாவை முன்னிட்டு,கோவில் விழா குழுவினர் மற்றும் உபயதாரர்கள் சார்பில் அன்னதானம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.