உடுமலை காமாட்சியம்மன் கோவிலில் திருக்கல்யாணம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28மார் 2024 12:03
உடுமலை : தளி ரோடு காமாட்சி அம்மன் கோவிலில், திருக்கல்யாண உற்சவம் இன்று காலை நடைபெற்றது. திருமண கோலத்தில் அம்மன் அருள்பாலித்தார்.
உடுமலை தளி ரோட்டில் மேம்பாலம் அருகே, காமாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. கோவில் கும்பாபிஷேக இரண்டாம் ஆண்டு விழா மற்றும் திருக்கல்யாண உற்சவ விழா கடந்த, 12ல், நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. கடந்த, 19ம் தேதி கொடியேற்றம், முளைப்பாலிகை இடும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து தீர்த்தம் எடுத்து வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இன்று காலை 9:00 மணிக்கு மேல், 10:00 மணிக்குள் அபிஷேக பூஜை நடைபெற்றது. தொடர்ந்து, காலை, 10:00 மணிக்கு மேல், 11:30 மணிக்குள் காமாட்சி அம்மன் ஏகாம்பரேஸ்வரருக்கு திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு, 7:00 மணிக்கு அம்மன் திருவீதியுலா நடக்கிறது.